திருவாரூர்

ரசு பேருந்தில் தற்காலிக ஓட்டுனராக நடித்து திருவாரூரில் இருவர் பண வசூல் செய்ததில் ஒருவர் பணத்துடன் தப்பி ஓடி உள்ளார்.

இன்று எட்டாம் நாளாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர்.    இதனால் தமிழ் நாடு முழுவதும் மக்கள் அவதியுற்றுள்ளனர்.  தமிழ் நாடு அரசு தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பேருந்துகள் தற்போது தற்காலிக நடத்துனர்கள் மற்றும் ஒட்டுனர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரளான மக்கள் திருவாரூர் பேருந்து நிலையத்தில் இன்று குவிந்துள்ளனர்.   அரசு பேருந்துகளில் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதை பயன்படுத்தி திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து இரண்டு பேர்  பயணிகளிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.    வழியில் ஆண்டிப்பாளையம் பகுதியில் பயணச் சீட்டு பரிசோதகர் நிற்பதைக் கண்ட உடன் நடத்துனர்களில் ஒருவர் பணத்துடன் அங்கிருந்து ஓடி விட்டார்.    பரிசோதகர் மற்றொரு நடத்துனரை பிடித்து விசாரணை நடத்தி அவரை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.