டில்லி:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (21ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சி, டிடிவி தினகரன் சார்பில் அதிகளவு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதால் ஆங்காங்கே மோதல் சம்பவங்களும் நடந்தது. பண பட்டுவாடா புகார் காரணமாக ஏற்கனவே ஒரு முறை இந்த தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த முறையும் ரத்து செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி விக்ரம் பாத்ரா தொகுதியில் ஆய்வு முடிந்து டில்லி சென்றார். அவர் தனது அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். இதனால் தேர்தல் ரத்தாகுமோ என்று அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்தன.
ஆனால், இதனை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் மறுத்துள்ளன. ‘‘திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும். பணப்பட்டுவாடா தொடர்பான ஆதாரம் ஏதும் இல்லை’’ என்று ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.