சென்னை,
கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்று அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் முடிவு குறித்து வார இதழ் ஒன்றில் எழுதியுள்ள கமல் “திருடனிடம் பிச்சை எடுத்த மக்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் ஆனந்தவிகடன் வார இதழ் தொடரில் எழுதியுள்ள கமல் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தனது கருத்தை கூறி உள்ளார். அப்போது, “ஆளும் கட்சி தரப்பில் வாக்காளர்கள் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது. முதல்வர் ஆரம்பித்து அமைச்சர் வரை ஒவ்வொருவரும் கச்சிதமாக பட்டுவாடா செய்தது அம்பலமாகியுள்ளது. சுயமாக வளர்ந்த சுயேட்சை ரூ.20,000 தந்து ஒவ்வொரு ஓட்டுக்கும் விலை நிர்ணயித்தார். அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை அழுத்திவிட்டார்கள் வாக்காளர்கள்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் கமல்.
மேலும், ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோய்விட்டனர். 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனது பிச்சை எடுப்பது போன்றது. திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.