சென்னை,

டந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டத் தேர்தல் அதிகாரி தா. கார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

வாக்குப்பெட்டிகள் அனைத்தும் குயின்மேரிஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகள் அனைத்தும்  கேமரா மூலம் தேர்தல் ஆணைய அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (  24-ந் தேதி)  காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

14 மேஜைகளில் 19 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஓட்டு எண்ணும்போது அந்த எந்திரத்தில் பழுது ஏற்பட்டால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விவிபிஏடி எந்திரத்தில் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரம்) உள்ள சீட்டுகள் எண்ணப்படும் என்று கார்த்திகேயன் கூறி உள்ளார்.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.