சிறப்புக் கட்டுரை: ஜீவசகாப்தன்
தினகரனின் வெற்றி சொல்லும் செய்திகள்
1989 ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை கிழக்கு மற்றும் ,மருங்காபுரியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிப் பெற்றது.அதுதான் முடக்கப்பட்டு மீண்டு வந்த இரட்டை இலை சின்னம் பெற்ற முதல் வெற்றி. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்த கடைசி தேர்தலும் அதுதான். அதற்கு பிறகு, கிட்ட தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறது.
அதுவும் இந்த இடைத்தேர்தலில் கவனிக்கவேண்டிய விசயம் இரட்டை இலை சின்னம் இல்லாமல் சுயேட்சை சின்னம் வெற்றிப் பெற்றிருக்கிறது. கடந்த 28 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அல்லது ஆளும் திமுக மட்டுமே வெற்றிப் பெற்றிருக்கிறது.அதை தவிர்த்து சுயேட்சை யாக வெற்றிப் பெற்றிருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.
89 சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு,சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. அந்த தேர்தலில் 27 இடங்களையும் 21 விழுக்காடு வாக்குகளையும் பெற்றார் ஜெயலலிதா. ஆனால்,இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஒரு படி மேலே போய்விட்டார். ஏனென்றால் ,ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்றபோது,இரட்டை இலை என்கிற சின்னம் கிடையாது. ஜெயலலிதாவிற்கு அது சாதகமான விசயம்தான். ஆனால் தற்போது இரட்டை இலை சின்னம் மதுசூதனனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.அந்த வலுவான சின்னம் இருக்கும்பொழுதே, அந்த சின்னத்தை வெற்றிக் கண்டிருக்கிறார்.
இரட்டை இலை சின்னத்தில், யாரை நிப்பாட்டினாலும் வெற்றிபெறும் என்பது போன்ற பேச்சுக்கள் இனிமேல் தமிழகத்தில் எடுபடாது. கட்சி , நிற்கும் வேட்பாளர் இவர்களை கடந்து சின்னம் என்கிற புனிதத்திற்கு தமிழக மக்கள் பலியாக மாட்டார்கள் என்கிற வரலாற்றை தொடக்கி வைத்திருக்கிறார் தினகரன்.
ஆக,சின்னம் இ்ல்லை, ஆளும் கட்சியும் இல்லை,கட்சியும் இல்லை.நடப்பது இடைத்தேர்தல்.பொதுவாக வெற்றிக்கான காரணிகள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும் தினகரன் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
இந்தக் கூற்று இரண்டு செய்திகளைச் சொல்கிறது.ஒன்று,தங்களின் கோரிக்கைகளை நடுவண் அரசிடம் எடுத்து வைக்கும் திராணியுடையவர்களாக எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். இரண்டாவதாக, நடுவண் அரசு எதிர்ப்பு என்கிற அரசியலை திமுக வீரியமாக எடுக்கவில்லை என்று நினைக்கிறார்கள். தினகரன் பாஜகவை எதிர்த்தார் என்று சொல்வதை விட பாஜக தன் எதிரியாக தினகரனை அடையாளம் காட்டியது. ஆகவே,பாஜக எதிர் தினகரன் அரசியலை மக்கள் நேரடியாக பார்த்தார்கள்.ஆகவே,தினகரனை தலைவனாக உருவாக்கியதில் நடுவண் அரசிற்கு மிக முக்கியமான பங்கு உண்டு.
டில்லி எதிர்ப்பும் தமிழகத்தின் பாரம்பரியமும்
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு,தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.ஆனால்,தினகரனின் வெற்றிக்குப் பிறகு,அதிமுகவிற்கும் தலைமை இருக்கிறது என்பது உறுதியாகிறது. இதன் மூலமாக,72 லிருந்து தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் திமுக அதிமுக என்கிற இரு துருவ அரசியலே தொடரப்போகிறது என்பதைதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு உணர்த்துகிறது
. திமுக ஆதரவு நிலையில் இருந்தாலும்,திராவிடர் கழகம் உட்பட பல்வேறு திராவிட இயக்க உணர்வாளர்கள் தினகரனின் வெற்றியை மகிழ்ச்சியாகவேப் பார்க்கின்றனர். அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தினகரன் மீதுள்ள பாசமோ ,நம்பிக்கையோ அல்ல. டில்லியின் கைப்பாவையாக இருக்கும் தற்போதைய அதிமுக தலைமை தொடரக்கூடாது என்கிற ஆதங்கமே அதற்கு காரணம்.
நடுவண் அரசு எதிர்ப்பு என்பது பலரை இங்கு தலைவர்களாக்கியிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கை கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், நடுவண் அரசு எதிர்ப்பு என்கிற ஒற்றைப்புள்ளியை மய்யப்படுத்தி,வானவில் கூட்டணியை உருவாக்கி வெற்றியும் கண்டவர் அண்ணா.
80 ல் தனது ஆட்சிக் கலைக்கப்பட்டபோது,நடுவண் அரசு எனது ஆட்சியை கலைத்துவிட்டது. நான் என்ன தவறு செய்தேன்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து எம்ஜிஆர் சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றார்.
2009 க்குப் பிறகு,ஜெயலலிதா முன் வைத்த நடுவண் அரசு எதிர்ப்பு என்பது தொடர்ந்து அவருக்கு வெற்றிகளைத் தந்தது.
வடக்கு வாழ்கிறது: தெற்கு தேய்கிறது என்பது பழைய முழக்கமாக இருக்கலாம். அந்த முழக்கத்தை காலத்திற்கேற்றாற்போல் வேறு வேறு வார்த்தைகளில்,திராவிட கட்சிகள் இன்னும் உயிர்ப்புடனே வைத்திருக்கின்றன. நடுவண் அரசு வஞ்சிக்கிறது அல்லது இங்குள்ள கட்சித் தலைமையை அழிக்கப்பார்க்கிறது என்று தமிழக மக்கள் உணர்ந்தால், பாதிக்கப்பட்ட கட்சிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவர்.தினகரனின் வெற்றியையும் இந்த வரலாற்றுத் தொடர்ச்சியாகத்தான் நாம் பார்க்கவேண்டும்.
திராவிட கட்சியின் தலைமைக்கு தினகரன் அணியமாகிறாரா?
ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை,இரண்டு தேர்தல்கள் தவிர்த்து அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிப் பெற்றிருக்கிறது. ஆக,அதிமுக பாரம்பரியமான தொகுதியைச் சேர்ந்தவர்கள் தினகரனைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆக,தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் தினகரன்.
ஒரு மாவட்டச் செயலாளராக இருப்பதற்கு அந்த மாவட்டத்தின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். ஆனால் கட்சியின் தலைமை வகிப்பதற்கு,சாதி கடந்த ஆளுமையாக இருக்கவேண்டும். அது போன்றோர்கள் மட்டுமே கட்சிக்குத் தலைமை ஏற்க முடியும்.இது தமிழகத்தின் எழுதப்படாத விதி.
எம்ஜிஆர்,ஜெயலலிதா,கருணாநிதி, என திராவிட கட்சித் தலைமைகள் யாருமே இங்கு சாதி செல்வாக்கால் வெற்றிப் பெறவில்லை. இவர்கள் வெற்றிப் பெற்ற தொகுதிகள் அனைத்திலும் இவர்களது சமூகம் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. கட்சிக்காரர்களும் ,பொதுவான பிற சமூக மக்களும் வாக்களித்தே கருணாநிதி ,ஜெயலலிதா,எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் வாகை சூடினார்கள். அந்த வகையில் டிடிவி தினகரன் வெற்றிப் பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் அவருடைய சொந்த சாதி மிகவும் சிறுபான்மையினரே. அவர்களின் வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தால் டிடிவி தினகரன் மிகவும் பரிதாபகரமான நிலையில் தோற்றிருப்பார்.ஆக,கட்சியினர் அவரை அதிமுக தலைவராக பார்க்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
பெரும்பான்மை சமூகத்திலிருந்து ஒரு திராவிடத் தலைமை
மற்றொரு முக்கியமான விவகாரத்தை நாம் கவனிக்கவேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு தலைமை ஏற்ற அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர்,,ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. இவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் கட்சியின் மாவட்டச் செயலாளராக ஆவது கூட கடினம். ஆனால்,டிடிவி தினகரன் தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்.அந்த வகையில் திராவிடக் கட்சிக்கு முதன் முறையாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தலைமையேற்கிறார் .
தினகரன் தன்னுடைய ஆளுமையை தக்கவைப்பாரா?
.நீட் உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் கவனம் செலுத்த வில்லை.விவசாயிகள் பாதிக்கப்படும்போதும்,மீனவர்களின் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்போதும் அக்கறை காட்டவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் தற்போதைய ஆளும் மாநில அரசு மீது இருக்கிறது.இதைப் புரிந்து கொண்டு தினகரன் செயல்பாடுவாராயின் கட்சித் தலைமையை தக்கவைக்க வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்தின் கட்சிப் பொறுப்புகளிலும் ஆட்சிப் பொறுப்புகளில் இதுவரை இடம்பெறாத பல சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும் செயல்திட்டங்கள் வகுக்கவேண்டும். தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தினகரனுக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று திருமாவளவன் அவர்களே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். சாதி முத்திரை வந்துவிட்டால் ஒட்டு மொத்த கட்சிக்கான தலைமையாக முடியாது.இந்த உண்மையை அவர் உணர்ந்திருப்பதாகவே தெரியவருகிறது.
திமுக தோல்விக்குக்கான காரணங்கள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி தொண்டர்களை உற்சாகமிழக்க வைத்திருக்கிறது. ஆனால் இந்த ஒரு தோல்வியை வைத்து, திமுக பின்னடைவைச் சந்தித்து விடாது.
2006 லிருந்து 2011 வரை அனைத்து இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி வாகை சூடியது.ஆனால்,2011 தேர்தலில் அதிமுக அறுதி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைத்தது.2011 லிருந்து 2016 வரை அனைத்து இடைத்தேர்தல்களில் அதிமுக வென்றது. ஆனால் 2016 தேர்தலில் அதிமுகவால் அபாரமான வெற்றியைப் பெறவில்லை. திமுக சட்டசபையில் வலுவான எதிர்க்கட்சியாக வந்து அமர்ந்தது. ஆகையால்,இடைத்தேர்தலை வைத்து,ஒரு கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.
இந்த தேர்தலில் நாம் பணம் கொடுக்க கூடாது என்று உறுதியாக இருந்திருக்கிறார்கள்.திமுகவின் இந்த செயலை மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டுகின்றனர்.அதே சமயம் சரியான பூத் முகவர்களை நியமிப்பதில் திமுக சரிவர செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டை பலரும் முன்வைக்கின்றனர். அதிமுகவினர் கொடுத்த பணத்தை தடுப்பதிலோ,அல்லது அதற்கு துணைபோன அதிகாரிகளை குற்றம்சாட்டுவதிலோ,தினகரன் காட்டிய ஆர்வத்தை திமுக துளிஅளவும் காட்டவில்லை. இது போன்ற விசயங்களில் வீரியமாக செயல்பட்டிருந்தால்.திமுக மரியாதையான இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கும்.
கருணாநிதி ஜெயலலிதா என கால்நூற்றாண்டை பார்த்த தமிழக மக்கள் இனி ஸ்டாலின் தினகரன் என பார்க்கப்போகிறார்கள். ஸ்டாலின் –சசிகலா, ஸ்டாலின் -ஓபிஎஸ் ,ஸ்டாலின்-ஈபிஎஸ், பல போட்டிகளை கடந்து ஸ்டாலின் -தினகரன் என்கிற போட்டியில் வந்து நிற்கிறது தமிழகம். திமுகவைப் பொறுத்தவரை மரியாதையான போட்டிதான். மாநில நலனைக் காப்பதில் யார் விஞ்சி நிற்கப்போகிறார்களோ ? அவர்களே போட்டியில் வெற்றி பெறுவர்.