நியூஸ்பாண்ட்:

டைத்தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு வித்தியாசமான முறையில் பணப்பட்டுவாடா செய்ய சில வேட்பாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து காலியான, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வரும், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு, அ.தி.மு.க., – தி.மு.க., – பா.ஜ., கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க., என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்துள்ள நிலையில், சசிகலாவின் அக்காள் மகன் தினகரன், சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அணிகள் பிரச்னையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால், ஏப்ரலில் நடக்க இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில், தினகரன், சுயேச்சையாக களம் இறங்கினார். அவர், வெற்றிபெற்றால்  முதல்வர் ஆவார் என்ற பேச்சு அடிபட்டது.

அப்போது  அவரது ஆதரவாளர்கள், ஓட்டுக்காக பணத்தை அள்ளி வீசினர்.  பணம் விநியோகிக்கப்படுவதை வீடியோ ஆதாரமாக, போட்டி வேட்பாளர்கள் வெளியிட்டனர். இதனால், வருமான வரித்துறையில், தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையே, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஆதர வாளர்கள் வாயிலாக, வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள், வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டன.

இப்படி பணப் பட்டுவாடா உறுதியானதால், ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகருக்கு, டிச., 21ல், தேர்தல் நடக்க இருக்கிறது.  தற்போது அரசியல் சூழல் மாறியுள்ளது. ஆனாலும் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் திட்டத்தை குறிப்பிட்ட வேட்பாளரின் ஆட்கள் அரங்கேற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த முறையும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்களை வழங்க திட்டமிடலாம் என்பதை உணர்ந்து  தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும்  தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், “வாக்காளர்களின் செல்போன் எண்களைக் கொண்டு பே.டி.எம். மூலம் பணம் வழங்க திட்டமிட்டிருக்கிறார்கள்” என்று நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.

ஆனால், “அப்படி பே.டி.எம். மூலம் பணம் அளித்தால், எளிதில் சிக்கிவிடுவார்கள். ஆகவே வேறு திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்கள்” என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குரிமை பெற்றவர்களை, வேட்பாளரின் ஏஜெண்டுகள் அணுகி, “வேறு தொகுதியில் வசிக்கும் உங்கள் உறவினர்கள் முகவரி கொடுங்கள். அவர்களிடம் உங்களுக்கான பணத்தைக் கொடுத்துவிடுகிறோம்” என்று கேட்டு வாங்கிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பணத்தைப் பெறும் உறவினர்களுக்கும் ஒரு தொகை அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை அப்படித் தர முடியவில்லை என்றால் உறவினரின் வங்கி எண் பெற்று அதில் பணத்தை செலுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

இது எப்படி இருக்கு?