சென்னை,

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள  ஆர்.கே. நகர் தொகுதிக்கு  டிசம்பர் 31-க்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும் என ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணமடைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலும் டிடிவி தினகரன் தரப்பினரின் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தக்கோரியும், அந்த தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கக்கோரி திமுக சார்பாக அந்த தொகுதியில் போட்டி வேட்பாளர் மருதுகணேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  ஆர்.கே.நகர் தொகுதியில், இதுவரை   45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

இதைத் தொடர்ந்து,  வரும்  டிச.31-ம் தேதிக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பணையை டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இந்த உத்தரவில் எவ்வித மாற்றமுமில்லை என்றும்,  மேலும், நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் குறித்த விவரத்தை வலைதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின்போது திமுக சார்பில்,  ஆர்.கே.நகர் தொகுதியில் 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் கூறியிருப்பதோ  45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.