சென்னை:
ஜெ.மறைவை தொடர்ந்து காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேவையான வசதிகள் பெற அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் உள்பட அமைச்சர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் மசூதனின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக மதுசூதனன், திமுக சார்பாக மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம், பாஜ சார்பாக கரு.நாகராஜன் உள்பட சுயேச்சையாக டிடிவி தினகரனும் களத்தில் உள்ளனர்.
அங்கு திமுக அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதே வேளையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும் செய்திகள் பரவி வருகிறது. அதை கண்டித்து திமுகவினர் ஆங்காங்கே மறியல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுசூதனை ஆதரித்து, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் ஆர்.கே. நகரை சுற்றிச் சுற்றி வருகின்றனர். அப்போது ஆர்.கே.நகர் மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றும் அறிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே வேளையில் திமுகவின் பிரசாரமும் நடைபெற்று வருகிறது. ஆனால், விறுவிறுப்பு இல்லாமல் தொய்வாகவே காணப்படுகிறது. திமுக கூட்டணி கட்சியினர் யாரும் தென்படுவதில்லை. அதோடு கட்சியின் மூத்த தலைவர்கள் எவரும் பிரசாரத்தில் பங்கேற்காததால் திமுக தொண்டர்கள் சோர்வாகவே காணப்படுகின்றனர்.
ஆனால், டிடிவி தரப்போ மற்றொரு பக்கம் பணத்தால் வாக்காளர்களை விலைபேசி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் உள்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தெருத்தெருவாக சுற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஜெ முதல்வராக இருந்தபோது, மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டம் அறிவித்து, பல இடங்களில் வழங்கியும் வந்தார். அந்த திட்டத்தை ஜெ. பிறந்தநாளின்போது ஆர்.கே.நகரில் அமல்படுத்துவோம் என்று முதல்வர் பழனிச்சாமி கூறி உளளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தொகுதி பெண்கள் மற்றும் இளம்பெண்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிமுகவே தற்போது முன்னணியில் இருப்பதாகவும் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் திமுக வேட்பாளரான மருதுகணேஷை ஆதரித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிரசாரம் தொடங்க உள்ளார். அதன்பிறகே உண்மையான போட்டி தெரிய வரும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கருத்துகணிப்புகளோ வேறுவிதமாக உள்ளது. ஒரு நிறுவன கருத்து கணிப்பில் டிடிவி வெற்றி பெறுவார் என்றும், மற்றொரு கருத்துக்கணப்பு திமுக வெற்றி பெறும் என்றும் என்று கூறி உள்ளது.
ஆனால் கள நிலவரப்படி பார்த்தோமானால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பே பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.