சென்னை: கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு, கட்டுமானத் தொழில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், கட்டுமானப் பொருகளின் தொடர் விலை உயர்வு, கட்டுமான நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. இதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ள நிலையில், அனைத்து வகையான தொழில்களும் முடங்கின. தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும் வகையில், இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. இதன் காரணமாக சுமார் 7 மாதங்களாக முடங்கிக்கிடந்த கட்டுமானத் தொழில் சிறிது சிறிதாக சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக கட்டுமான பணிகள் மீண்டும் முடங்கும் அச்சம் எழுந்துள்ளது.
தமிழகத்தில், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் 50 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் கடந்த 6 மாதங்களாக கேள்விக்குறியான நிலையில், தற்போதுதான் படிப்படியாக வேலைகள் நடைபெறத் தொடங்கி உள்ளது.
ஆனால், கட்டுமானப் பொருட்களின் தொடர் விலை உயர்வு, கட்டுமானத் தொழிலை மீண்டும் முடக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, கட்டுமானப் பணிகளுக்கான மதிப்பீடுகள் 15% வரையில் உயர்ந்துள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
ஆற்றுமணல் எட்டாக்கனியாக மாறிவிட்ட நிலையில், மற்ற அனைத்துகட்டுமானப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்து வருகிறது. சிமென்ட் மற்றும் இரும்புக் கம்பிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள. சிமென்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாய் வரையிலும்,கம்பியின் விலை டன்னுக்கு ரூ.13,000 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிவிசி குழாய்கள் போன்ற பொருட்களும் 14% வரை விலை உயர்ந்துள்ளதாக கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துஉள்ளனது.
உயர்ந்து வரும், கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாவிட்டால், கட்டுமானத் துறையை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுக்க முடியாமல் போய்விடும் என்று கட்டுமான நிறுவனங்கள் அஞ்சுகின்றனர்.
கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய், கடந்த டிசம்பர் 18 அன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாவிட்டால், கட்டுமான நிறுவனங்களால் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணிகளை முடிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை வழங்கிவரும் துறைகளில் கட்டுமானத் துறையும் ஒன்று. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 7% இந்தத் துறையின் பங்களிப்பு உள்ளது.
கட்டுமானத் துறையின் ஏற்ற இறக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். மேலும், சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை அமைப்பொன்றை மத்திய, மாநில அரசுகள் நிறுவி, விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.