சென்னை: இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில், சிறப்பாக ஆடிவந்த ரிஷப் பன்ட், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்களில் ஆட்டமிழந்து பரிதாபமாக வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியிலும், அவர் 91 ரன்களுக்கு அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், டெஸ்ட் போட்டியில் முதல் சதமடிக்கும் வாய்ப்பு அவருக்கு இன்னும் கைக்கூடாமலேயே உள்ளது.
இந்திய அணி, 90 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அணியை சற்று மீட்டவர்கள் புஜாராவும், ரிஷப் பன்ட்டும்தான். இன்று புஜாரா நிதானமான இன்னிங்ஸ் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 143 பந்துகளை சந்தித்த அவர், 11 பவுண்டரிகளுடன் 73 ரன்களை எடுத்து டாம் பெஸ் பந்தில் விக்கெட் இழந்தார்.
இந்நிலையில், எப்படியும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பன்ட், 88 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 9 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்திருந்தபோது, இவரின் விக்கெட்டை அதே டாம் பெஸ் கைப்பற்றினார். இதன்மூலம், ரிஷப் பன்ட்டின் சோகம் தொடர்கிறது.
ஃபாலோ ஆன் தவிர்க்க வேண்டுமெனில், மொத்தம் 378 ரன்களை சேர்க்க வேண்டுமென்ற நிலையில், 227 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. எனவே, சொந்த மண்ணில் ஒரு அவமானகரமான தோல்வியை சந்திக்குமா? கோலியின் இந்திய அணி என்ற கேள்வி எழுந்துள்ளது.