சென்னை: 10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை கடுமையாக எதிர்த்துள்ள தமிழகஅரசு, இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறி அதிமுக கூட்டத்தை புறக்கணித்தது. இதேபோல் பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதாரிக்கிறார்கள். இதனை விளக்கமாக நான் சொல்ல தேவையில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் முரணானது”, மாதம் 60ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள், ஏழைகளா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, 10% இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.