சென்னை: உயர்வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% இடஒதுக்கீடு  தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை  எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், 10சதவிகித இடஒதுக்கீட்டை வரவேற்ற காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? என கேள்வி எழுப்பியதுடன்,  இட ஒதுக்கீட்டால் திறமை போய்விட்டது என்று கூறி வருபவர்கள் இந்த இடஒதுக்கீட்டை மற்றும் ஏற்கின்றனர். இதில் உள்ள சூட்சமத்தை நான் சொல்ல தேவையில்லை என கூறினார்.

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்ப தற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த 8ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 8ம் தேதியே, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதினார். அதில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிமுக, பா.ஜ.க  இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

திமுக சார்பில்  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி; காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, அசன் மௌலானா; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல் திருமாவளவன், ரவிக்குமார்; பாமக சார்பில், வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ, வழக்கறிஞர் பாலு; மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, சின்னத்துரை; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், தளி ராமச்சந்திரன், மாரிமுத்து; மதிமுக சார்பில் டாக்டர் பூமிநாதன், சதன் திருமலை குமார்; மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, அப்துல் சமது; தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன்; கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்ராஜ் எம்.பி,  சூரியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தை பேசும்போது,  சமூக நீதிக்கு காங்கிரஸ் கோட்பாட்டின் அடிப்படையில் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். தேசிய கண்ணோட்டத்தில் காங்கிரஸ் பார்வை வேறு மாதிரி இருந்தாலும் தமிழ்நாட்டில் சமூக நீதி கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும்,  தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதல்வர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று கூறினார்,

இறுதியில்  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக, கல்விரீதியாக இடஒதுக்கீடுதான் சரியானது. பொருளாதாரரீதியாக இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்ட இந்த அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீதி கட்சி ஆட்சியில் தான் வகுப்புவாரி பிரதிநிதத்துவம் வழங்கப்பட்டது. காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் பின்னர்தான் பள்ளி, கல்லூரிக்குள் நுழைந்தார்கள். கல்வியின் மூலம் வேலைபெற்று பயன் அடைந்தார்கள். இன்றைக்கு சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் முன்னேறிய ஜாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுதான் பாஜகவின் திட்டம். இட ஒதுக்கீட்டால் திறமை போய்விட்டது என்று கூறி வருபவர்கள் இந்த இடஒதுக்கீட்டை மற்றும் ஏற்கின்றனர். இதில் உள்ள சூட்சமத்தை நான் சொல்ல தேவையில்லை. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் நாம் எதிர்க்க மாட்டோம்.ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள்? மாதம் ரூ.62 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? பொருளாதார ரீதியில் வழங்கும் சலுகை அரசியலமைப்புக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.