டில்லி,
ருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு இரண்டரை லட்சத்திலிருந்து 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வருமான வரி விலக்கு ரூ.2.50 லட்சமாக இருந்து வருகிறது. இதை  ஆண்டுக்கு ரூ. 4 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகிறது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு  உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 8-ந் தேதி இரவு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என மத்தியஅரசு அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும், தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதற்கும்,  பணம் டெபாசிட் செய்வதற்கும்  பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நாட்டில் பணப்புழக்கம் குறைந்து அன்றாட செலவுக்கு பணம் இன்றி மக்கள் திண்டாடி வருகிறார்கள்.  மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, செலவை செயற்கையாக குறைக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சிறு வியாபாரிகளின் வியாபாரம் மந்தமாகி, பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்களிலும் ஆள்குறைப்பு நடவடிக்கையை செய்து வருகின்றனர். இதனால், பொருளாதார வளர்ச்சி மந்த கதியை நோக்கி வருகிறது.
இதன் காரணமாக எதிர்க்கட்சியினர் மற்றும்   பொதுமக்கள் மத்திய பாரதியஜனதா அரசின்மீது கடும் அதிருப்தி யில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அளிக்க மத்தியஅரசு முன்வந்துள்ளது. ஏற்கனவே கார்டுகள் மூலம் தேவையானவற்றை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அறிவித்து உள்ளது.
தற்போது நடுத்தர மற்றும் உயர்வகுப்பு மக்களை திருப்திபடுத்தும் வகையில் வருமான வரி உச்சவரம்பை கூட்ட முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே மத்திய அரசு வருமான வரி விலக்கு குறித்த அறிவிப்பை  முறைப்படி  அறிவிக்கும் எனத் தெரிகிறது.
மேலும் ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10 சதவீதம் வருமான வரி விதிக்க ஆலோசிக்கப்படுகிறது.
அடுத்ததாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம் வருமான வரியும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை ஊதியம் பெறுவோருக்கு 20 சதவீதம் வரியும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு 30 சதவீதம் வரியும் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மத்திய நேரிடி வரிகள் வாரியத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு நிதியாண்டில், நேர்முக வரியைக் காட்டிலும், மறைமுக வரிகள் வேகமாக வசூல் ஆகியுள்ளது. அக்டோபர் மாதம் வரை மறைமுக வரிகளான கலால்வரி, சேவை வரி, உற்பத்தி வரி ஆகியவை 24 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே சமயம், நேர்முக வரிகள் 15 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளன என்றார்.
ஆனால், ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மறைமுக வரிகள் 20 முதல் 30 சதவீதம் சரிந்துள்ளது. இதைச் சரிக்கட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரலாம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், இந்த செய்தியை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் பிராங்க் நோரோனா மறுத்துள்ளார். இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி ‘சி.என்.பி.சி. டி.வி. சேனலில் வெளியானது.