டெல்லி:
வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்பது பிற்போக்குத் தனமான நடவடிக்கை என்று அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி கோவா, பஞ்சாப்பில் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும், விரைவில் நடக்கவுள்ள டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு வாக்குசீட்டு முறை பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி ஆம்ஆத்மி அரசு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில் ஊழலுக்கு எதிராக போராடும் அண்ணா ஹசாரே ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில்,‘‘ நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் சமயத்தில் வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும என்று கேட்பது பிற்போக்குத் தனமாக நடவடிக்கையாகும்.
வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகங்களை எழுப்புவது, நம்மை பின்நோக்கி அழைத்துச் செல்லும் செயலாகும். வாக்குச்சீட்டு பயன்படுத்துவதால் அதிக நேரம் வீணாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பு ஏற்படுத்த அண்ணா ஹசாரேயுடன் இணைந்து அரவிந் கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார். பின்னர் அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்தால் இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திர முறைகேடு குறித்து அரவிந் கெஜ்ரிவாலில் குற்றம்சாட்டி வரும் நிலையில் அண்ணா ஹசாரேயில் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.