சென்னை,

சென்னை ரெட்டேரி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராமை 10 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய எழும்பூர்  நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள நகைக்கடையில்  மதிய உணவு இடைவேளையின்போது, கடையின் மேல்தள சீலிங்கை துளையிட்டு கடையினுள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள  3.5 கிலோ தங்கநகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்  நாதுராம் மற்றும் தினேஷ் சவுத்ரி என அறிந்து, அவர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்றிருந்தனர்.

கடந்த ஆண்டு  டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முயன்றபோது மதுரவாயல் போலீஸ்  ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் விசாரணையில்,  பெரியபாண்டியனை சுட்டது  உடன் சென்ற முனிசேகர் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து,  ராஜஸ்தான் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி  நாதுராமையும் மற்றும் அவனது கூட்டாளி கள் தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களை விசாரணைக்காக கடந்த 26ந்தேதி தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழக போலீசார்  கொள்ளையர்ள் 3 பேரையும்  நீதிபதி முன்பு  ஆஜர்ப்படுத்தி  புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்,   குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கொள்ளையர்கள்  3 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க  அனுமதி வழங்கி உத்தரவிட்டது.