சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை திமுகஅரசு நீக்கிய நிலையில், இன்று ஓய்வுபெறும் நிலையில், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமை உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் நாளில் பணி நீக்கம் செய்யப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், நீதிமன்றமும், இதுபோன்ற நடவடிக்கையை தவிர்க்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட மாட்டாது என உறுதி அளித்து அரசாணை வெளியிட்டது.
அதன்படி, ஓய்வுபெறும் நாளில் அரசுப்பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறை நீக்கம் செய்து, கடந்த 2021ம் ஆண்டு (GO NO : 111 , Date : 11.10.2021) அக்டோபர் மாதம் 11ந்தேதி அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நேரத்தில் புகாருக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் பற்றிய விசாரணையை குறித்த காலத்தில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஓய்வு பெறும் நாளில் அவர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்யப்படும் ஒரு சூழல் ஏற்படும் போது அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அவர்களுக்கு சலுகைகள் அனைத்து கிடைக்காமல் போய்விடுகிறது. இதனை தவிர்க்கக்கூடிய வகையில் அந்த நடைமுறை மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில் ஓய்வு பெறக்கூடிய காலத்தில் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் போது அதற்கான பாதிப்பை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையிலி, தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வந்த ஏடிஎஎஸ்பி வெள்ளத்துரை, சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பமாக திகழ்ந்த என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை இன்று ஓய்வுபெறும் நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வெள்ளத்துரை பணிமாற்றம் செய்யப்பட்டு, திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த நிலையில், அவரை பணிநீக்கம் செய்து மாநிலஅரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளத்துரை பணியிடை நீக்கம் நடவடிக்கை மாநில அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தமிழ்நாடு அரசின் அரசாணை வெறும் கண்துடைப்பு என விமர்சிக்கப்பட்டு வருகிறது.