சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், பள்ளி, கல்லூரிகளில் சாதி வேறுபாடுகளை களைவது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் அவ்வப்போது சாதிய மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கு ஒரு வகையில் அரசின் நடவடிக்கைகளும் காரணமாக கூறப்படுகிறது. இடஒதுக்கீடு, அதனால் ஒரு தரப்பினருக்கு மட்டுமே அதிக அளவிலான சலுகைகள் கிடைப்பதால், ஒழிக்கப்பட வேண்டிய சாதி மத வேறுபாடுகள் மீண்டும் தலை தூக்குகிறது. இதனால், சிறுவயதிலேயே மாணவர்களிடையே கருத்து வேற்றுமைகள் உருவாகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தென்மாவட்டங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளில் நடைபெறக்கூடிய சாதிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உரியப் பரிந்துரை அறிக்கையைப் பெறுவதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இருந்து இது தொடர்பாகக் கருத்துக்களைப் பெற்று ஆய்வு நடத்தி வருகிறார். அவரது பணிக்காலம் பிப்ரவரியுடன் நிறைவடைந்த நிலையில், குழுவின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதம், அதாவது, மே இறுதிவரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மே மாதத்திற்கு உள்ளாகத் தனது ஆய்வை முடித்து தமிழக அரசுக்குப் பரிந்துரை அறிக்கையை நீதிபதி சந்துரு அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே குழுவை நியமித்தும், அதன் பணிகள் குறித்தும் அரசாணை வெளியிட்டது. அதில், “முதலமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகளை வகுப்பதற்குச் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழு தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும். மேலும் ஒரு நபர் குழு தற்பொழுது இயங்கி வரும் (147, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-4) என்ற கட்டிடத்தில் தொடர்ந்து செயல்படும். இந்தக் குழு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது குழுவின் விதிமுறைகளாகும்.
ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள், உந்துதல்கள் (Motivation) தொடர்பான அறிக்கைகள் அளித்திட வேண்டும்.
மாணவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவான அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும். இந்தக் குழு மேற்படி பொருள் தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிக்கைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்று அரசுக்கு அறிக்கையாக அளித்திட வேண்டும்.
இது குறித்து ஆழ்ந்த நோக்க மறிய இக்குழு காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல குழு, சிறார் நீதி வாரியம், சாதி அடிப்படையிலான வன்முறையில் ஈடுபட்டு தண்டனை பெற்ற சிறார் ஆகியோருடன் உரையாடி, தெளிவான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறை அரசிற்கு அளிக்க வேண்டும். இது தொடர்பாக அரசால் பரிந்துரைக்கும் அல்லது குழு தேவை எனக் கருதும் பொருண்மைகளையும் ஆய்வு செய்திட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.