சென்னை: ஜூலை 1ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறிய ரக விமான சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே சேலத்தில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் இருந்தும் விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உதான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
அதன்படி, உதான் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் விமான சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி 2017 ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவைகள் துவங்கப்பட்டன. இதனை அடுத்து வார இறுதி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தனது விமான சேவையை ஜூலை 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்காக ஜூன் மாதத்தில் டிக்கெட் புக்கிங் துவங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து ஏர் செபா நிறுவனம் திருப்பதி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கும் விமான சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த விமான சேவை, பயணிகள் கூட்டம் இல்லாததால், 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. அப்போதும் மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லாததால், முன்னறிவிப்பின்றி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது.