பைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ஆறு மாத குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முடிவுகள் செப்டம்பர் மாதம் தெரியவரும் என்று அந்த நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி ஜெர்மன் இதழான ‘ஸ்பிகல்’லிடம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“5 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசிகளின் ஆய்வு முடிவு ஜூலை மாதத்தில் தெரியவரும், அதன் தரவுகளை ஆய்வு செய்ய மேலும் நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும்” என்று பயோஎன்டெக் செயல் அதிகாரி உகுர் ஷாஹின் அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“இவை அனைத்தும் நாங்கள் திட்டமிட்டபடி நடந்து முடிந்ததும், அந்தந்த வயது வரம்பு பிரிவுக்கு ஏற்ப, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசியை தயாரிப்பதற்கான முறையான அனுமதிக்கு பல்வேறு நாடுகளில் விண்ணப்பிக்க இருக்கிறோம்.
அவசர சிகிச்சைக்காக 12 முதல் 15 வயது வரை உள்ள இளம் பருவத்தினர் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க கோரி அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையினரை பைசர் – பயோஎன்டெக் நிறுவனம் இம்மாதம் அணுகியிருக்கிறது.
12 வயதுக்கு மேற்பட்ட இளம் பருவத்தினர் தடுப்பூசி அனுமதி பெறுவது குறித்து ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் உள்ள எங்கள் விண்ணப்பம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது” என்று ஷாஹின் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் வெளியான தடுப்பூசி குறித்த ஆய்வு அறிக்கையில் இந்நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இளம்பருவத்தினர் இடையே நல்ல பயனுள்ள விளைவுகளை தந்ததாகவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்ததாகவும் தெரியவந்துள்ளது.
16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு நோயின் தாக்கம் பெரிய அளவில் இருப்பதில்லை என்ற போதும், இவர்களிடம் நோயின் அறிகுறி தெரிவதில்லை என்பதால் இவர்களை அறியாமல் நோய் பரவலுக்கு இவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.