சென்னை

தீபாவளிக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்போருக்குத் தமிழக அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் கடைகளில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்குவது வழக்கமாகும்.  இந்த ஆண்டு நவம்பர் 4 அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.  தமிழகத்தில் இனிப்பு காரம் தயாரிக்கத் தேவையான பொருட்களைக் கடைக்காரர்கள் ஏற்கனவே வாங்கி வைக்கத் தொடங்கி உள்ளனர்.   

இனிப்பு காரம் தயாரிப்போருக்குத் தமிழக அரசின் உணவுக் கட்டுப்பாட்டுத் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அவை பின் வருமாறு :

* உணவுப் பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

* இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்.

* தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு கலன்கள் தூய்மையாகக்  கழுவி      உபயோகப்படுத்தும் முன்பு நன்றாக உலர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

* தயாரிப்பு பகுதி மற்றும் சமையலறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும்.

* சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

* உணவு சமைக்கும், கையாளும் பணியாளர்கள் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும். தூய்மையான ஆடைகள் அணிய வேண்டும்.

* பணியின்போது, பணியாளர்கள் கையுறை, தலையுறை, மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

* பணியாளர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.

* இனிப்பு, காரிகைகள் தயாரிப்பில் சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

* சமையலுக்கு பொட்டலமிட்டப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* உணவு தயாரிப்பின்போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக மும்முறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும்.

* இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் 100 பிபிஎம் அளவில் சேர்க்கலாம்.

* பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்கள் மற்றும் பாக்கெட்டுகள் மீது உணவுப்  பொருளின் விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். விபர சீட்டு பார்வைக்கு தெரியும்  வகையில் உள்ளே வைக்கப்பட வேண்டும்.

* விபரச்சீட்டில் உள்ள விபரங்கள் தெளிவாகப் படிக்கும் வகையில் அச்சிடப்பட வேண்டும்.

* தயாரிப்பாளர் பேக்கிங் செய்து நுகர்வோருக்கு நேரடியாகத் தரும்போது உணவு தரத்திலான கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்.