சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்த எடப்பாடி பழனிச்சாமி, குஷ்பூவின் பொய்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக பதில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதில், தவறான தகவல்களை தமிழ்நாடு அரசு தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கடந்த 2 மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது? இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும், எப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது, தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதுபோல, பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்புவும், ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு 5லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வீணடித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன், கொரோனா தடுப்பூசி விவரங்கள் தினமும் ஊடகங்களுடன் பகிரப்படுகின்றன, மேலும் இது அச்சு மற்றும் தொலைக்காட்சிகளிலும் தெரிவிக்கப்படுகிறது. செய்திகளைச் சரிபார்க்க அவருக்கு (எடப்பாடிக்கு) நேரம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவர் ஒரு வெள்ளை அறிக்கை கேட்டதால், நான் அதைக் கொடுப்பேன். அதிமுக ஆட்சியின் போது, அவர்கள் 4 லட்சம் அளவுகளை (6 சதவீதம்) வீணடித்தார்கள். ஆனால் இப்போது, கூடுதலாக 7 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளோம், இது ஒரு குப்பியின் பயன்பாட்டு வீதத்தின் திறனை விட அதிகமாகும் என்றார்.
அதுபோல, பாஜகவைச் சேர்ந்த செய்தித் தொடர்பாள குஷ்பு, தடுப்பூசி வீணடித்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறித்தும், ஒதுக்கப்பட்ட தடுப்பூசி அளவை விட அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்காக, அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சரே தமிழகத்தை பாராட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.