சென்னை:
தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, தலைவர்களின் நினைவுநாள், பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளின் போது, அரசு அதிகாரி தவிர மற்றவர்கள் மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளால் அளிக்கப்பட்ட உள்ளதால், தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலாளா் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மறைந்த தலைவா்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவா்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா்கள் மட்டுமே உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவிக்க அவ்வப்போது அனுமதி அளிக்கப்படுகிறது.
பொது முடக்கம் தொடரும் நிலையில், தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
மரியாதை செய்யப்படும் தலைவா்களின் குடும்பத்தைச் சோந்தவா்கள் 5 பேருக்கு மிகாமலும், அந்தந்த மாவட்டத்தைச் சோந்த பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவா்கள் 5 பேருக்கு மிகாமலும் ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று நிகழ்வில் பங்கேற்கலாம். வாகனத்துக்கான அனுமதியையும் பெற வேண்டும். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.