ஆஸ்கர் வென்ற ரஹ்மானை வாழ்த்த ஜானகி உருவில் வந்த வள்ளுவர்..

==========================================================

வெள்ளுடையில் பார்ப்பதற்கு அமைதியாகவும். அருளுடன் இருக்கும் எஸ்.ஜானகி குறும்புக்காரரருக் கூட. தெரிந்தவர்களிடம் மனம்விட்டு பேசும் அவர் சினிமாக் காரர்கள் என்றால் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவார். அதை யாரும் தவறாக எண்ணுவதில்லை. அதற்கான தருணங்களையும் அவர் பொது மேடையிலே செய்திருக்கிறார்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ’ஸ்லம் டாக் மில்லினர்’ஹாலிவுட் படத்துக்கு இசை அமைத்திருந்தார். இப்படத்துக்காக கடந்த 2009 ஆண்டு 2 ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தார். முதன்முறையாக இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்று வந்த பெருமை ரஹ்மானையே சேரும். அதற்காக இசைஞானி இளையராஜா தலைமையில் ரஹ்மானுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.

 

தமிழ் திரையுலகின் எல்லா இசை அமைப்பா ளர்களும், பாடகர், பாடகிகளும் ஒரே மேடை யில் திரண்டனர். இதில் எஸ்.ஜானகி கலந்து கொண்டு ரஹ்மானை பாராட்டினார். முன்னதாக அவருக்கு பொன்னாடை அணிவித்த ஜானகி ரஹ்மானின் உச்சு முகர்ந்து முத்தம் தந்து விட்டு பேச வந்தவர் தனது பேச்சால் ரஹ்மானை கண்ணீர் சிந்த வைத்து விட்டார். அப்போது அவர் திருவள்ளுவராக வும் மாறினார். அப்படி என்ன பேசினார், வள்ளுவனாக மாறினாரா என ஆச்சரியப்படுகி றீர்களா? ஆம் அப்படித்தான் நடந்தது அந்த நிகழ்ச்சி…
இதோ, எஸ் ஜானகி வள்ளுவன்போல் பேசிய பேச்சு:
ராஜா (இளையராஜா) சொன்னதுபோல.. உரிமையோடு ராஜான்னு சொல்லுறேன்.. அவரை சிறிய வயதில் இருந்து எனக்கு தெரியும். யாரும் தப்பாக நினைக்காதீர்கள். ராஜா சொன்னதுபோல இன்றைக்கு நடக்கும் இந்த விழாபோல் வேறு எங்கு நடந்தாலும் இதுபோல விழாவாக இது அமைந்திருக்காது. ஏனென்றால் இது இசையே ரகுமானை பாராட்டுவது போன்றதாகும். எனக்கு அப்படித் தோன்றுகிறது. சாட்சாத் சரஸ்வதி தேவியே வந்து ரஹ்மானை பாராட்டுவது போல் இருக்கிறது.
ராஜாவோட முதல் படத்தில் (முதல் படம் அன்னக்கிளி) நான் பாடிய போது அவர் சின்னப் பையன், சின்னதாக இருப்பார். அவரது முதல் படமே பிரமாதமாக செய்து விட்டார். எல்லா பாடல்களும் ஹிட்டானது முதல் படத்திலேயே உயர்ந்த இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
அதுக்கு ரகுமான் கொஞ்சம் கூடுதல்.. முதல்படம் ரோஜா.. நேஷனல் அவார்டு வாங்கி வந்தார்.
ரஹ்மான் வளர்ந்து வந்ததை நான் பார்த்திருக் கிறேன். ரஹ்மான், சேகரோட மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு சேகர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் என்பதை நான் உணர்கிறேன். அவர் ஆசிர்வாதம்தான் ரகுமான் இந்த அளவுக்கு உயர்ந்தது. அவருடைய அம்மா அப்பா செய்த புண்ணியம்தான் ரஹ்மான்.
(இவ்வாறு எஸ்.ஜானகி உருக்கமாக சொன்ன போது ரஹ்மான் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தன்னை தெரிந்துக்கொண்ட உலகம் தனது தந்தையை அவ்வளவாக அறிந்திருக்க வில்லை. ஆஸ்கர் என்ற பெரிய விருதினை தமிழகத்துக்கு கொண்டு வந்தபோது அதற்காக இந்த நிலைக்கு தன்னை உயர்த்த ஆரம்பம் முதல் பாடுபட்ட தனது தந்தை சேகரின் பெயரை இசைஞானிகளின் முன்னிலையில் ஜானகி சொன்னபோது ரஹ்மானுக்கு தந்தை யின் நினைவு மட்டுமல்லாமல் அவர் தன்னை இந்தளவுக்கு உயர்வதற்கு பட்டபாடுகளும் அதற்காக அவர் சிந்திய வியர்வை, உழைப்பு எல்லாம் ஒரு கணம் ரஹ்மான் கண்முன் வந்து சென்றது. அந்த எண்ணங்கள்தான் ரஹ்மானின் கண்ணீராக பெருகி வந்தது. வழிந்த கண்ணீரை குழந்தைபோல் கைகளால் துடைத்துக் கொண்டே ஜானகியை ஒரு தாயை பார்ப்பது போல் பார்த்தார் ரஹ்மான் .


ரஹ்மான் திருக்குறள் வழி வாழ்ந்து காட்டு வதை ஜானகி, திருக்குறளை சொல்லாமல் பேச்சில் உணர்த்தினார். இல்லறவியலில் வள்ளுவர் தந்தையின் கடைமையை சொல்லும்போது,
’தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்’ என்பார்.
அதாவது, தந்தை தனது மகனுக்கு செய்யத்தக்க நல்லுதவி கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும் படியாக அவனை கல்வியில் மேம்படச் செய்தலாகும். அதை ரஹ்மான் தந்தை செய்ததால்தான் இன்று இசைஞானி களே ரஹ்மானை முன்னிலைப்படுத்தி புகழ்ந்தனர்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொலெனும் சொல் என்று மக்கட்பேறு அதிகாரத்தில் மகனின் கடைமையை வள்ளுவர் உணர்த்தினார்.
அதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் சொல்லும் சொல்லாகும்.
வள்ளுவனின் அந்த வார்த்தைகள்தான் ஜானகி யின் வாழ்த்தில் நிரம்பி இருந்தது. ஜானகி உருவில் வள்ளுவனே வந்து ரஹ்மானை வாழ்த்தியது போல் அவையோர் எல்லோரும் உணர்ந்தனர்)
ஜானகி பேச்சு தொடர்ச்சி..
முதன்முறையாக இந்தியாவுக்கு ஆஸ்கார் அவார்டு வாங்கியவர் ஏ ஆர் ரகுமான். அந்தப் பெருமையை தேடிக் கொடுத்தது ரஹ்மான். இந்த மேடையில் எல்லா இசையமைப்பாளர் களையும் ஒன்றாக நான் பார்த்தது எனக்கு ஆனந்தம் அழுகையாக பொங்கி வருகிறது.
இவ்வாறு எஸ்.ஜானகி உருக்கமாக பேசி முடித்தபோது அரங்கமே கூடி நின்று அப்ளாஸ் செய்தது.

எஸ்.ஜானகியின் குறும்புத்தனம் பற்றி சொன் னால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சில வருடங்களுக்கு முன் சாதகப்பறவைகள் இசை நிகழ்ச்சியில் எஸ்.ஜானகி. பி.சுசீலா, எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி.பி.ஸ்ரீனிவாஸ் எல்லோரும் முதல் வரிசையில் அமர்ந்திருந் தார்கள். பி. சுசீலா மேடைக்கு வந்தார். அவர் கூடவே எஸ்.ஜானகியும் வந்தார். இருவர் கையிலும் மைக் தரப்பட்டது. எம்ஜிஆர் , ஜெயலலிதா நடித்த ’அடிமைப்பெண்’ படத்தில் இருவரின் குரலில் இடம்பெற்ற ’காலத்தை வென்றவன் நீ..’ பாடலைப் பாடப்போகி றார்கள் என்று அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். பாடல் தொடங்கிய வுடன் கைதட்ட தயாராக இருந்தது அரங்கம்.
மைக்கை வாங்கிய ஜானகி, ’நான் இன்றைக்கு கொஞ்ச நேரம் சுசீலாவின் லவ்வர் ஆகப் போகிறேன்’ என்றார். அதைக்கேட்டு அரங்க மும் சரி, சுசீலாவும் சரி குபீரென்று சிரித்து விட்டனர்.
(அரங்கம் அடங்கியதும்)
’ஆமாங்க, சுசீலா பெண் குரலில் பாடப்போகிறார். நான் ஆண் குரலில் பாடப்போகிறேன்’ என்றார் ஜானகி.
(குரலை மாற்றிப்பாடும் வித்தை ஜானகிக்கு கை வந்த கலை. குமரிபோலவும் பாடுவார், கிழவி போலவும் பாடுவார், குழந்தைபோல வும் பாடுவார், சிறுவன்போலவும் பாடுவார்)
பி.சுசீலா, ’அன்பே வா’ படத்தில் இடம் பெற்ற, ’ராஜாவின்பார்வை ராணியின் பக்கம்..’ என்ற பாடலை பாடினார். அடுத்து ஆண் குரலில், ’ராணியின் முகமே ரசிப்பது சுகமே..’ என்று எஸ்.ஜானகி பாடியதும் அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பாடி அசத்தினார். அரங்கம் கைதட்டி மகிழ்ந்தது.
குறும்புக்கார ஜானகி உலகநாயகனிடம் பாட்டி வேஷம் கேட்ட நிகழ்வு பற்றி நாளை பார்க்கலாம்.

எஸ்.ஜானகி 6ம் பகுதி நிறைவு.

-கண்ணன்