சென்னை: தமிழக சட்டப்பேரவையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத சட்டங்களான வேளாண் சட்டங்கள், சிஏஏ சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.
16-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் 2வது நாள் அமர்வான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. இன்றைய அமர்வில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். மேலும், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் கவுண்டர் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
தொடர்ந்து ஆளுநர் உரை மீது அனைத்து கட்சியினரும் பேசி வந்தனர். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் ஒன்றிய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானங்கள், ஜூலையில் நடக்கும் பட்ஜெட் தொடரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும், தற்போதைய ஆளுநர் உரை யாற்றிய கூட்டத்தொடரில் தீர்மானங்கள் கொண்டு வரப்படவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்