கொல்கத்தா,
மருத்துவ பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், தான் சரியான மனநிலையில் இருப்பதாக கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்து வரும் நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று நீதிபதி கர்ணன் வீட்டுக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு பரிசோதனைக்கு வந்தது.
ஏற்கனவே, நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி கர்ணனுக்கு மனநிலை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கொல்கத்தா அரசு மருத்துவமனை டாக்டர்கள் குழு மூலம் மே 4ம் தேதி கர்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும், டாக்டர்கள் குழுவுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு மேற்கு வங்க போலீஸ் டிஜிபிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது.
அதைத்தொடர்ந்து, இன்று போலீசாருடன் கொல்கத்தாவில் உள்ள கர்ணனின் வீட்டுக்கு மருத்துவர்கள் சென்றனர்.
ஆனால், நீதிபதி கர்ணன் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்து விட்டார்.
மருத்துவர்களிடம், தான் சரியான மனநிலையில் இருப்பதாக கூறினார்.
மேலும் ”எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் தற்போது என்னுடன் இல்லை. எனது மனைவியும், ஒரு மகனும் சென்னையில் உள்ளனர் என்றும், மற்றொரு மகன் பிரான்சில் பணியாற்றி வருகிறார் என்றார்.
தன்னை பரிசோதனை செய்ய அவர்களின் அனுமதி தேவை’ என்று கூறி மறுத்துவிட்டார்.
நீதிபதி கர்ணனிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட விவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வரும் 8-ந்தேதி டாக்டர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.