துபாய்: பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் எழுந்த சர்ச்சை காரணமாக, பெண்களுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், நாக்அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களை அறிவித்துள்ளது ஐசிசி.
அடுத்த 2021ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது பெண்களுக்கான 50 ஓவர் (ஒருநாள்) கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரில், இந்தியா – இங்கிலாந்து மோதவிருந்த அரையிறுதிப் போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதற்காக நாக்அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களை ஒதுக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்தன.
எனவே, அடுத்தாண்டு நடைபெறவுள்ள பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், நாக்அவுட் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்களை அறிவிக்கும் முடிவை எடுத்துள்ளது ஐசிசி.
2021ம் ஆண்டின் பெண்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தொடரில் 2 அரையிறுதிப் போட்டிகள் மற்றும் 1 இறுதிப்போட்டி ஆகியவற்றுக்கு ரிசர்வ் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.