திருவனந்தபுரம்

கேரள மாநில அரசு ”கேரள வங்கி” என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க க்கு இந்திய ரிசா்வ் வங்கி  அனுமதி அளித்துள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும், கேரள கூட்டுறவு வங்கியுடன் ஒன்றிணைத்து ‘கேரள வங்கி’ என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க அந்த மாநில அரசு ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியிருந்தது.  இந்த முடிவு கூட்டுறவு வங்கியை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டுள்ளதாகக் கேரள மாநில அரசு தெரிவித்திருந்தது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரள வங்கி தொடர்பாக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தற்போது ‘கேரள வங்கி’ உருவாக்கத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதியின் மூலம் மாநிலத்தின் பெரிய வங்கியாக ‘கேரள வங்கி’ உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘கேரள வங்கியை அமைக்க ஆா்பிஐ அனுமதியளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகோலும் என நம்புகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள அனுமதியில் ‘கேரள வங்கி’யின் உருவாக்கம் என்பது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.