சென்னை: சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு  மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த  முதல்வர் ஸ்டாலினை சந்தித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் தலைமையில் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2ந்தேதிநடைபெற்ற அமர்வின்போது,    சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையையும் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு வன்னியர் சமுதாய மக்களிடம் இருந்து நன்றிகள் குவிந்து வருகிறது. வன்னிய சமுதாய தலைவர்கள், பாமகவினர் என அனைத்து தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன் தலைமையில்,  முன்னாள் எம்எல்ஏ மற்றும்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் உ.பலராமன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தாமோதரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் விருகை பட்டாபி,  தலைவர் தென் சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் எம் ஏ முத்தழகன் , தமிழ்நாடு lNRLF தலைவர் வாழப்பாடி கர்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பகத்சிங்,  பண்ருட்டி மணி முன்னாள் நகர தலைவர், சைதை தேவதாஸ், அடையார் இரவி உள்பட பலர் முதல்வர் ஸ்டாலினை சட்டப்பேரவை வளாகத்தில்  நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.