சென்னை: இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் தற்போது மாநிலம் முழுவதும் வெள்ளிநடை போட்டு பயணித்து வருகிறது.
மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளை இந்திய பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழு நிராகரித்தால், அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன், இந்த அலங்கார ஊர்திகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அதன்படி, சென்னையில் குடியரசு தின விழா முடிவடைந்ததும், தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்திகளை மக்களின் பார்வைக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். அதன்படி, இந்த ஊர்திகள் மூன்று ஊர்திகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. முதல் ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையும், மகாகவி பாரதியாரின் சிலை இன்னொரு ஊர்தியிலும், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய மூன்றாவது ஊர்தியும் மாநிலம் தழுவிய பயணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.,
இந்த அலங்கார ஊர்திகள் நேற்று மாலை 6.30 மணியளவில் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலைைய வந்தடைந்தது. இந்த குடியரசு தின அலங்கார ஊர்திகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு அந்த ஊர்திகளில் வந்த டிரைவர்களுக்கு இனிப்பு வழங்கி, அனுப்பி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் மோகன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர். இந்த ஊர்தி இன்று திருச்சி சென்றடைகறிது.
இந்த ஊர்திகள் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பாதுகாப்புடன் வெற்றிக்களிப்புடன் அணிவகுத்து செல்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.