டெல்லி: கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என  ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.

இன்று காலை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம்  நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது,  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும். இதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் 3.35 என்ற அளவிலேயே தொடரும். இதனால் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்றார்.

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும். வட்டி விகிதத்தை மாற்றாமல் நீடிக்க, நிதிக்கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக வாக்களித்தனர்.

2021ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும். வருங்காலங்களில் நகர்ப்புறங்களில் தேவை அதிகரிக்கும், கிராமங்களிலும் தேவை அதிகரித்துள்ளது. மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.1% ஆகவும்,  நான்காம் காலாண்டுக்கு 0.7% ஆகவும் இருக்கும் என கணித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.