திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு! கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகம்…

Must read

சென்னை: திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என அதிமுக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகமாக சசிகலா வருகை குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைந்து, கட்சியை கபளிகரம் செய்ய திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். அவருக்கு அதிமுகவைச் சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரால் கட்சியை விட்டு வெளியேறிய ஓபிஎஸ், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க விரும்புவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் செய்தியளார்களிடம் பேசிய ஓபிஎஸ்,  சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசனை செய்யப்படும் என கூறினார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதையடுத்து, செயற்குழு கூடி பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது உட்கட்சி தேர்தலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் இன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள  முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில், ஓபிஎஸ், இபிஎஸ் உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், ‘பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்’ என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி குட்டிக்கதை ஒன்று கூறினார். அதில், தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதே தலைமைக்கு அழகு என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ், சசிகலா குறித்தே, இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. இது அதிமுகவினரிடையே மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article