சென்னை: பிரபல யூடிபூர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அதிரடியாக ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது என்றும், மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக அரசுக்கு எதிராகவும், அரசின் ஊழல்களையும், அரசு நிர்வாகத்தில் தலையிடும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் குறித்து கடுமையாக விமர்சித்து வந்தவர் முன்னாள் காவல்அதிகாரியான சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் ஆன்லைன் செய்தி தளமும், யூடியூப் தளமும் நடத்தி வருகிறார். இவரது பதிவுகள் மற்றும் விடியோக்களுக்கு தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த நிலையில், ரெட்ஃபிக்ஸ் யூடியுப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில், காவல்துறையினர் மற்றும் பெண் காவலர்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை நள்ளிரவு கைது செய்த காவல்துறையினர் அவர்மீது கஞ்சா வழக்கு உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார்கள் பதியப்பட்டு மொத்தம் 17 வழக்குகளில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சவுக்கு சங்கர்மீது டிஜிபி சங்கர் ஜிவால் குண்டம் சட்டத்தையும் போட்டு கைது செய்தார். கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் உள்ளார். சிறையில் காவலர்களால் தாக்கப்பட்டு கைகள் முறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையில் தன்மீதான வழக்குளில் இருந்து ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த பல வழக்குகளில் அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அவர்மீதான குண்டர் சட்ட வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம், அவர்மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
சவுக்கு சங்கரின் தாயர் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில் தனது மகன் சவுக்கு சங்கரை சட்டவிரோதமாக அடைத்து வைத்து இருப்பதாகவும், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
நேற்றைய விசாரணையின்போது ( ஆகஸ்டு 8ந்தேதி), மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், அதனைத் தடுக்கவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது தான் என்று நீதிபதிகள், இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்குத் தண்டனை பெற்றுத்தரலாம் எனவும், ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு எனக் குறிப்பிட்டனர்.
மேலும், திரைப்படங்களில் போலீசார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது? அப்படியென்றால் அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே வழக்கின் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்தச் சூழலில் இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு, இனறு காலை 10:30 மணிக்கு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
மேலும், அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்போருக்கு எதிராக உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்த நீதிபதிகள், சமூக ஊடகங்கள் வருகைக்குப் பின் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளது ஆரோக்கியமானது என்றும், மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்கள் உள்ளன. அரசு அதனை முடக்க கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்து உள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் மீது வேறு வழக்கு இல்லை என்றால் அவரை விடுதலை செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
இதனால் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக சிறையில் உள்ள சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை ஆபாசமாக பேசிய வழக்கு, மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் ஜாமீன் பெற்று உள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் விடுதலை ஆவதற்கு தடையாக இருந்தது. ஏனெனியில் எந்த வழக்கில் சிறையில் இருந்தாலும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தால் அவர் விடுதலை ஆக முடியாது என்ற நிலை உள்ளது. ஆனால் தற்போது அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால், சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் சவுக்கு சங்கர்மீது, சென்னை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட, 16 போலீஸ் நிலையங்களில், சங்கருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட மொத்தமுள்ள 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. சில வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்படாத வழக்குகளில் கைது செய்யக்கூடாது என உத்தரவிடும்படியும், சங்கர் தரப்பில் கோரப்பட்டது. போலீஸ் தரப்பில், ‘சங்கருக்கு எதிராக பதிவான அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவம் தொடர்புடையதா என்பதை சரிபார்க்க வேண்டும்; அதற்கு அவகாசம் வழங்க வேண்டும்’ என கூறப்பட்டது.
இதையடுத்து, அனைத்து வழக்குகளும், ஒரே சம்பவத்துக்காக பதிவு செய்யப்பட்டதா என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி, போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.