சென்னை: சேலத்தில் உள்ள விமான நிலையம் மூலம் ஏற்கனவே சிறிய ரக விமான சேவைகள் நடைபெற்று வந்த நிலையில், போதிய பயணிகள் இன்று விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 2 ஆண்டுக்குப் பிறகு சேலத்துக்கு மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் – சேலம் – கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. கொச்சின் – சேலம் – பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஏற்கனவே விமான நிலையம் இருந்து வந்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் உள்ளது. ஆனால், அப்பகுதி மக்களிடையே வரவேற்பு இல்லாத நிலையில், விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வேண்டுகோளை ஏற்று 2018ம் ஆண்டு, அதாவது சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு ம மீண்டும் சிறிய ரக விமான சேவைகள் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் இந்த விமான சேவை நடைபெற்றது.
முதலில் சேலம் – சென்னை, சென்னை – சேலம் தினசரி விமானம் இயக்கப்பட்டது. அதன்பின் பயணிகள் குறைந்த அளவு மட்டுமே விமானத்தை பயன்படுத்தியதால் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாக சேலம் – சென்னை, சென்னை – சேலம் தினசரி விமானம் இயக்கப்பட்டது. ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது ஆனால், கட்டணம் அதிகம் என்பதால் பொதுமக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால் விமான சேவை மீண்டும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது சேலம் பகுதியில், பெரும் தொழிற்சாலைகள் வர தொடங்கியுள்ளதால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை மீண்டும் அக்டோபர் முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற மத்தியஅரசு, அடுத்த மாதம் (அக்டோபர்) 16 ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளததாக தெரிவித்து உள்ளது. இந்த தகவலை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். மீண்டும் ஹைதராபாத் – சேலம் – பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என்றும் கூறினார்.
மத்திய அரசின் உதான் 5 திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்தில் இருந்து சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் – சேலம் – கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. கொச்சின் – சேலம் – பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும்.
இதே போன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் பெங்களூர் – சேலம் – ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. இது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்-சேலம்-கொச்சின் விமான நேரப்பட்டியல் (அக்.28 வரை)
பெங்களூர் – சேலம் நண்பகல் 12.40-1.40
சேலம் – கொச்சின் மதியம் 2.05 – 03.15
கொச்சின் – சேலம் மாலை 3.40 – 04.50
சேலம் – பெங்களூர் மாலை 05.15 – 06.15
திங்கள், செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை நடைபெறும்.