சென்னை: மத்தியஅரசின் திட்டமான அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 15 ரயில் நிலையங்கள்   மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இதில், முதற்கட்டமாக கிண்டி, பரங்கிமலை  ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புக்கு ரூ30 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக  தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில், ரயில் நிலையங்களை மேம்படுத்த அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டம் செயல்படுத்தப்படு கிறது.  இதில், மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அடிக்கல் நாட்டினார். இவற்றில் 25 ரயில் நிலையங் கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ.616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது  அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ30 கோடியில் கிண்டி, செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப் பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக சென்னை கோட்டத்தில்  15 ரயில் நிலையங்களை மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன.  பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா மற்றும் கடற்கரை ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் பயணிகளின் வசதிக்கேற்ப மேம்பட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளன.

கிண்டி ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் நுழைவு பகுதிகள் மேம்படுத்தப்படுகிறது. புதிய முன்பதிவு அலுவலகம், வணிக வளாகம், ரயில் நிலையத்தின் தரையை மறுசீரமைத்தல், பழைய கூரை தளங்களை அலுமினிய கூரைகளாக மாற்றுதல், ரயில் நிலையத்தின் முன்பக்கம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், ரயில் நிலையத்தில் 3 லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், பயணிகளுக்கு தகவல் பலகை, சிசிடிவி காட்சி அமைத்தல் போன்ற பணிகள் நடைப்பெற உள்ளன. இதற்காக சுமார் ₹13.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

செயின்ட் தாமஸ் மவுண்ட்  ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி மேம்படுத்துதல், பேருந்து நிறுத்தத்தின் அருகில் நுழைவு வளைவுகள் அமைத்தல், 3 முன்பதிவு அலுவலகம் அமைத்தல், வணிக வளாக கடைகள், அனைத்து தளங்களின் தரைகள் மறுசீரமைத்தல், கூடுதல் பிளாட்பார்ம் மற்றும் பயணிகளுக்கு தங்குமிடம் அமைத்தல், கூரைகள் மாற்றுதல், ரயில் நிலையத்தின் முன்பக்கத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்தின் பக்கத்திலும் பார்க்கிங் பகுதிகள் மறுவடிவமைப்பு செய்தல், சிசிடிவி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ₹14.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை: ரயில் நிலையத்தின் நான்கு நுழைவு பகுதியிலும் நேர்த்தியான முகப்புகள் மற்றும் கடைகள் அமைத்தல், வடக்கு மற்றும் தெற்கு நுழைவுகளில் ஏடிஎம் அமைத்தல், அனைத்து தளங்களின் தரைகள் மறுசீரமைத்தல், வாகன நிறுத்தங்களின் இடத்தை அதிகரித்தல், பயணிகளுக்கு புரியும் வகையில் தகவல் காட்சி அமைப்பு வழங்குதல், சிசிடிவி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் புதிய முன்பதிவு அலுவலகம் ஏற்பாடு, முன்பதிவு அலுவகம் அருகே காத்திருப்பு இடம், சிற்றுண்டி கடைகள், தளங்கள் மறு சீரமைப்பு, புதிய பிளாட்பார்ம், பழைய கூரைகள் அலுமினிய கூரைகளாக மாற்றுதல், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், சிசிடிவி போன்றவை அமைக்கப்பட உள்ளது.

இதுபோன்று மாம்பலம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்படுறது. செங்கல்பட்டு: புதிய கட்டிடம் அமைத்தல், புதிய நுழைவாயில், புதிய வளாகம், முன்பதிவு கவுன்டர்கள், கூடுதலாக 3 ஓய்வு அறைகள், ஏசி காத்திருப்பு அறை, விஐபிக்கள் அறை, சில்லரை விற்பனை போன்றவற்றை வழங்க தற்போதுள்ள கட்டிடத்தை மாற்றியமைத்தல், வாகன நிறுத்தங்களின் இடத்தை அதிகரித்தல், கூரைகளை மாற்றுதல், சிசிடிவி அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் அடுத்த சில மாதங்களில் நிறைவடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.