சென்னை:
தமிழகத்தில் விதிகள் மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அளித்த புகார்களை அடிப்படையாக வைத்து சென்னை உயர் நீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அதையடுத்து விதிகள் மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு தனியார் ஒருவர், தனது வீடு முன்பு பேனர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், பேனர்களை வைக்க தடை விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, பேனர்கள் வைக்க சில விதிமுறைகளை வகுக்கப்பட்டு அரசு அனுமதி பெற்று வைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் பேனர்கள் கலாச்சாரம் பெருகி வருவதை தொடர்ந்து, இன்று விசாரணை செய்த உயர்நீதி மன்றம், போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்கிறது? என்று கேள்வி எழுப்பியது.
அனுமதி இல்லாமல் வைக்கப்படும் பேனர்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும், கிரீன்வேஸ் சாலையில் இருந்து நீதிமன்றம் வரை தான் பேனர்கள் இல்லை என்ற நீதி மன்றம், சென்னையின் மற்ற அனைத்து இடங்களிலும் பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது எனவும் கூறியது.
இதுகுறித்து, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை வரும் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தது.