அக்ரா:

ஆப்ரிக்காவில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவி இறங்க மறுத்து வரும் நிலையில் கானா நாட்டின் அதிபராக நனோ அகூஃபோ அடோவின் பதவி ஏற்பு விழா அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான அகூஃபோ அடோ, ஏற்கனவே அதிபராக இருந்த ஜான் டிராமானி மஹாமாவை கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைய செய்தார். இதையடுத்து பதவி ஏற்புவிழா கானா தலைவர் அக்ராவில் நடந்தது.

இதில் ஆப்ரிக்கா முழுவதுமுள்ள தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அக்ராவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் அகூஃபோ அடோ பதவி பிரமாணம் எடுப்பதை காண ஆயிரக்கணக்கான விருந்தினர்களும், பிரமுகர்களும் கூடியிருந்தனர்.

தலைவர் பதவியிலிருந்து விலக விரும்பாத ஆப்ரிக்காவில் சுமூகமான முறையில் நடைபெற்ற இந்த அதிகார மாற்றம் ஜனநாயகத்தின் வெற்றியாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

இந்த பதவியேற்புக்கு பிறகு காம்பியா நாட்டு அதிபர் யாக்மா ஜாமே, பதவியிலிருந்து இறங்குவதை உறுதி செய்வது எப்படி என்று இதில் கலந்துகொண்ட ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த யாக்மா ஜாமே பதவியிறங்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.