சீன முதலீடுகளை எதிர்த்து இலங்கையில் பெரும் கலவரம்! நூற்றுக்கணக்கானோர் படுகாயம்!

Must read

கொழும்பு:

இலங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலத்தை எதிர்த்து பெரும் கலவரம் வெடித்துள்ளது.

இலங்கையின் தென் பகுதியில், சீனாவின் முதலீட்டுடன் மேம்படுத்தப்படும் துறைமுக நகர் மற்றும் தொழில் மண்டலத்தை உருவாக்குவதற்காக  ஆயிரக்கணக்கான கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த பகுதியை சீனக் காலனியாக மாற்ற தங்களை வெளியேற்ற அரசு முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசோ, சீனாவுக்கு 99 ஆண்டு கால ஒப்பந்தத்தில் துறைமுகப் பகுதியை குத்தகைக்கு விட ஒப்பந்தத்தை தயாரித்து வருகிறது. மக்களிடமிருந்து எடுக்கப்படும் நிலத்துக்குப் பதிலாக  புதிய நிலம் வழங்கப்படும் என்று கூறுகிறது.

இந்த நிலையில், அம்பாந்தோட்டை தொழில் மண்டல அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற இருந்தது. இதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவிருந்தார். அதற்கு சற்று முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுக நகருக்கு அருகே மோதல் வெடித்தது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த பிக்குகள் மற்றும் அந்தப் பகுயைச் சேர்ந்தவர்கள் பெருந்திரளாகக்கூடி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, அரசு ஆதரவாளர்களும் காவல்துறையினரும் தாக்கினர். இதையடுத்து கலவரம் மூண்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும்   அவர்களை விரட்ட முயன்றனர். இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் பலத்த பாதுகாப்புக்கிடையே, நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

இதற்கிடையே, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், துறைமுகத் திட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகே அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இலங்கையில் பெருகும் சீன முதலீட்டுக்கு எதிராக மக்கள் திரண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article