சென்னை:

பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்திலிருந்து அகற்றுமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என கோவை காவல் துறை வேண்டுகோள் விடுத்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சம்பவங்களை நேரடி ஒளிபரப்பு செய்வதில் சமூக வலைதளங்கள் தற்போது முக்கிய பங்காற்றுகின்றன. சமூக வலைதளங்களால் ஏராளமான பயன் இருந்தாலும், அதே அளவுக்கு பாதிப்பும் இருக்கிறது.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள், ஆடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை முதல் தகவல் அறிக்கை,நீதிமன்ற ஆவணங்கள், ஊடகங்களில் அடையாளம் காட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவ்வாறு வெளியிட்டால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 228ஏ பிரிவின் கீழ், 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணை கோவை எஸ்பி அடையாளப்படுத்தியிருக்கிறார்.

பாலியல் வழக்குகளில் விதிமுறைகளை பின்பற்றுமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடவேண்டும். மேலும், பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்திலிருந்து அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இது தொடர்பான வீடியோ, ஆடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்எஸ்.சுந்தர் தலைமையிலான உயர் நீதிமன்ற மதுரை கிளை டிவிஷன் பெஞ்ச், “பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வீடியோவை இணையத்திலிருந்து அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளப்படுத்தி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, புதிதாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம்” என்று தீர்ப்பளித்தனர்.