டில்லி:
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இரு ந்து இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகளை அகற்றி மதசார்பின்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று யூஜிசி குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாட்டில் உள்ள 10 மத்திய பல்கலைக்கழகங்களில் எழுந்த முறைகேடுகள் புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய மனித வள மேம்பாட்டு துறை கடந்த ஏப்ரலில் யூஜிசி சார்பில் 5 குழுக்களை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வகையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், உத்தரகாண்ட் ஹெம்வாதி நந்தன் பகுகுனா கார்வால் பல்கலைக்கழகம், ஜார்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், வர்தா மகாத்மா காந்தி அன்தராஷ்திரியா ஹிந்தி விஸ்வாவித்யாலயா, திரிபுரா பல்கலைக்கழகம், மத்திய பிரதேசம் ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் அலிகார் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் ஐஐடி சென்னை பேராசிரியர் ஸ்ரீபத் கார்மால்கர், மகரிஷி தாயானந் சரஸ்வதி பல்லைக்கழகத்தை சேர்ந்த கைலாஷ் சோடானி, கவுகாத்தி பல்கலைக்கழக பேராசிரயர் மசர் ஆசிப், பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் சங்கர்ஷா பாசு ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
இந்த குழு பல்கலைக்கழக உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி, ஆராய்ச்சி, நிதி செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய வரையறை செய்யப்பட்டது. அப்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் என்ற பெயரை அலிகார் பல்லைக்கழகம் என்று அழைக்க வேண்டும். அல்லது இதன் நிறுவனர் சர் சையது அகமது கான் என்ற பெயரில் அழைக்க வேண்டும். இதே பரிந்துரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கும் பொருந்தும் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஒரு கல்வி நிறுவனம் மதசார்பின்மை கொண்டதாக இருக்க வேண்டும். இதர மத்திய பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படும் நடைமுறையே இங்கும் துணைவேந்தர் நியமனத்திற்கு பின்பற்ற வேண்டும்.
மேலும், இங்கு பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் தான் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் முன்னாள் மாணவர்களை பேராசிரியர்களாக நியமனம் செய்வதை 5 ஆண்டுகளுக்கு நிறுத்த வேண்டும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.