ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துகாரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர். அப்போது பயங்கரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பபதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பொதுமக்களும் நிம்மதி பெரூமூச்சு விட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர் பயணமாக ஆயத்தமாகி வருகின்றனர்.

காஷ்மீரில் இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து  370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அங்கு நிலமை சீரடைந்து வரும் நிலையில்  கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் வெளியிட்டுள்ள உத்தரவில், காஷ்மீருக்கு சுற்றுலா வருவோருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளனர்.

தற்போது சுற்றுலா சீசன் என்பதால் 20,000 முதல் 25,000 சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அளித்துள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு காஷ்மீர் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காஷ்மீர் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித்தலைவர்களின் வீட்டுச் சிறை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சுற்றுலா துறை, ஆகஸ்டு மாதத்திற்குப் பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் காஷ்மீருக்கு 1.74 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல ஜூலையில் 1.52 லட்சம் பேர் சுற்றுலாவுக்காக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த 2 மாதங்களாக அங்கு எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படவில்லை.