சென்னை:
தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை அமைச்சர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழு மாற்றியமைக்கப்பட்டு வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை தொடர்ந்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழகம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், நில அளவை துறை அதிகாரிகள், வருவாய்துறையினர் இணைந்த குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏரி குளங்கள் மற்றும் ஆறு, சாலை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் என அரசு அறிவித்தது.
இந்நிலையில், தற்போது ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை மாற்றி, வருவாய்துறை அமைச்சர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவில் நில நிர்வாக ஆணையர் உறுப்பினர் செயலராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.