வீட்டில் தேவையே இல்லாமல் வரும் சண்டை சச்சரவுக்கு தீர்வு தரும் பரிகாரம்!

சிலபேரது வீடுகளில் காரணமே இல்லாமல் சண்டை வரும். எதற்காக சண்டை ஆரம்பித்தது என்றே தெரியாது. இறுதியாகப் பார்த்தால் அந்த சண்டை கைகலப்பில் முடிந்தது, குடும்பமே இரண்டாகியிருக்கும். யாரோ குடும்பத்திற்குச் சாபம் விட்டது போல, தொடர்ந்து பிரச்சனையில் மாட்டிச் சிக்கித் தவிப்பவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு சுலபமான பரிகார முறையைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நம்முடைய முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்காமல் இருந்தாலும், அவர்களுடைய சாபம் நமக்கு இருந்தாலும் கூட, நம் வீட்டில் நிம்மதியே இருக்காது. இந்த பிரச்சனைக்கும் நாம் அறியாமல் செய்த ஏதாவது சின்ன தவறு கூட காரணமாக இருக்கலாம். அந்த முன்னோர்களின் ஆசீர்வாதத்தை நாம் பெறுவதற்கு என்ன செய்யலாம்? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று உங்கள் வீட்டில், வாரம் தோறும் செய்யும் பூஜையோடு சேர்த்து இந்த பூஜையையும் தொடங்கிக் கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைக் காகிதத்தில் உங்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் பெயர் எத்தனை தெரியுமோ, அத்தனையையும் அந்த காகிதத்தில் எழுதி வைக்க வேண்டும்.

அதன் பின்பு ஒரு வெள்ளைத் துணியை எடுத்து அதில் வெற்றிலை நான்கு, பாக்கு இரண்டு, ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை மஞ்சள் தூளில் கலந்த அட்சதை, ஒரு கைப்பிடி அளவு நெல், ஒரு ரூபாய் நாணயம், இரண்டு விரலி மஞ்சள், இவை அனைத்தையும் ஒன்றாக வைத்து, அதில் நீங்கள் எழுதி வைத்திருக்கும் முன்னோர்கள் பெயரைக் கொண்ட காகிதத்தையும் அந்த வெள்ளை துணியில், ஒரு முடிச்சாகக் கட்டி, உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை முதலில் வேண்டி, அதன் பின்பு முன்னோர்களையும் வேண்டி வழிபடுங்கள்.

இந்த முடிச்சை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபடுவதன் மூலம், உங்கள் குடும்பத்திற்கு கண்திருஷ்டி இருந்தாலும், தேவையில்லாத தோஷம் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் ஒரு விடிவு காலம் பிறந்து விடும். 48 நாட்கள் இந்த முடிச்சை, உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யவேண்டும். தினம்தோறும் கற்பூர ஆராதனை காட்ட முடியவில்லை என்றாலும், மாலை நேரம் விளக்கு ஏற்றும்போது ஊதுவத்தி தூபம் மட்டுமாவது இந்த முடிச்சுக்கு காட்டி வழிபட வேண்டும்.

48 நாட்கள் முடிந்த பின்பு அந்த முடிச்சில் இருக்கும் அரிசி, நெல்லை பறவைகளுக்கு உணவாகப் போட்டுவிடலாம். மீதமுள்ள பொருளைக் கால் படாத இடத்தில் போட்டுவிடலாம். ஒரு ரூபாயை கோயில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். இந்த பரிகாரத்தைச் செய்து முடித்த பின்பு, உங்களது வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

முடிந்தவரைக் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் இருக்க வேண்டும். அதாவது தினந்தோறும் குலதெய்வத்தை நினைத்துத் தான் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். முன்னோர்களுக்குச் செய்யக்கூடிய தர்ப்பணத்தை ஏதோ ஒரு காரணத்தால் செய்ய முடியாமல் போனாலும் கூட, செய்யாமல் இருக்கக் கூடாது. தவிர்க்க முடியாத காரணத்தினால் தர்ப்பணம் தவறினாலும், உங்களால் முடிந்தவரை முதியோர்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ, அதைச் செய்து முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.