முட்டாள்தனமான பொது விடுமுறைகள்: சரி செய்ய ஒரு தீர்வு!

Must read

  டி.வி.எஸ். சோமு பக்கம்:

ன்று மகாவீர் ஜெயந்தி. தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இன்று அரசு விடுமுறை விடுகிறது.

மகாவீரர் ஜெயந்தி என்பது , சமண சமயத்தின் 24வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் ஆகும்.

இந்த நாளை எத்தனைப் பேர் கொண்டாடுகிறார்கள் என்பதில் இருக்கிறது, இந்த விடுமுறைக்கான முட்டாள்த்தனம்.

இந்தியாவில் சமணர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை முதலில்

அறிய வேண்டும்.

2011ம் ஆண்டு, இறுதியாக இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது.

சி. சந்திரமௌலி என்பவரது தலைமையில் இந்த மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது தெரிந்த விபரம், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியே, 1 லட்சத்து 93 ஆயிரத்து 422 பேர். ( தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சத்து47 ஆயிரத்து 30 பேர்.)

இந்திய மக்கள் தொகையில் எந்தெந்த மதத்தினர் எத்தனைப் பேர்?

இந்துக்கள் 79.80% இஸ்லாமியர் 14.23% கிறித்துவர் 2.30% சீக்கியர் 1.72% பவுத்தர்கள் 0.70% சமணம் 0.37% பார்சி 0.06% (2001) பிறசமயம்/ சமயமின்மை 0.9% ஆகும்.

அதாவது ஒட்டுமொத்த இந்தியாவில் 50 லட்சம் பேருக்கும் குறைவாகவே சமணர்கள் இருக்கிறார்கள். இவர்கள்கொண்டாடும் பண்டிகைக்கு சுமார் 121 கோடி பேர் உள்ள நாட்டில் பொது விடுமுறை.

பெரும்பாலானவர்களுக்கு மகாவீர் ஜெயந்தியோ அதை எந்த மதத்தவர் கொண்டாடுகிறார்கள் என்பதோ தெரியாது. “ஏதோஇன்றைக்கு விடுமுறையாம்” என்கிற அளவிலேதான் தகவல் தெரியும்.

இது போன்ற விடுமுறைகள் தேவையா?

இதனால் எத்தனை மக்களுக்குச் சிரமம்?

உதாரணமாக, வங்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.

கிருஹ்ண ஜெயந்தி விழா

மகாவீர் ஜெயந்தி என்பதால் இன்று (29.03.2018) விடுமுறை. நாளை வருடாந்திர கணக்கு முடிவு, என்பதால் விடுமுறை. அடுத்து சனிக்கிழமை மட்டும் வங்கி இயங்கும். மீண்டும் அடுத்த நாள் ஞாயிறு என்பதால் விடுமுறை. அடுத்தநாள்வருடாந்திர கணக்கு முடிவு என்பதால் விடுமுறை. அதாவது தொடர்ந்து ஐந்து நாட்கள். இடையில் ஒரு நாள் மட்டும்விடுப்பு.

இதே போல பண்டிகைகளுக்காக.. அதாவது பெரும்பாலோர் கொண்டாடாத பண்டிகளைகளுக்காக எத்தனை எத்தனைஅரசுவிடுமுறைகள்.

உதாரணமாக  தமிழக அரசின் விடுமுறைகளைப் பார்ப்போம்.

ஆங்கில புத்தாண்டு, பொங்கல்,  திருவள்ளுவர் தினம்,  உழவர்திருநாள்,  குடியரசு தினம்,  தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர்ஜெயந்தி, புனித வெள்ளி,  வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவுவங்கிகள் ) ,  தமிழ்ப் புத்தாண்டு,  டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள், மே தினம், ரம்ஜான், சுதந்திர தினம், பக்ரீத், கிருஷ்ண ஜெயந்தி,   விநாயகர் சதுர்த்தி, மொகரம்,  காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி,  தீபாவளி, மிலாது நபி,  கிறிஸ்துமஸ்.

தமிழக அரசு விடுமுறை (2018)

மூச்சு முட்டுகிறதா?

இத போலத்தான் மத்திய அரசின் விடுமுறைகளும்.

மதம்சார்ந்த விடுமுறைகளே அதிகம். இதில் உதாரணாக தீபாவளியை பெரும்பாலான இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். நாள் முழுதும் திருவிழாதான். இதற்கு விடுமுறை சரிதான். ஆனால் கிருஷ்ண ஜெயந்தி, விஜயதசமி போன்றவை நாள் முழுதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்ல. காலையில் சிறிது நேர பூஜையோடு முடியும். இதற்கு எதற்காக நாள் முழுதும் விடுமுறை?

அதே போல இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை கோலோகலமாக கொண்டாடுவார்கள். நாள் முழுதும் விடுமுறை தேவைதான். தவறில்லை. ஆனால் மிலாதுநபியை அப்படி நாள் முழுதும் இஸ்லாமியர் கொண்டாடுவதில்லை. இதற்கும் விடுமுறை தேவையில்லை.

தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடும் பண்டிக்கைக்கு மற்ற மதத்தினருக்கும்  ஏன் விடுமுறை அளிக்க வேண்டும்?

இதில் மதம் சாராத இரு விடுமுறைகளும் நகைப்புக்கிடமானவைையே.

மே 1 உழைப்பாளர் தினம். கூலித்தொழிலாளிகளில் இருந்து, ஐ.டி.  கொத்தடிமை தொழிலாளிகள் வரை இன்று 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்க்கும் அவலச்சூழலில் இந்த உழைப்பாளர் தினத்துக்கு விடுமுறை தேவையா?

காலியாக கிடக்கும் அரசு அலுவலகங்கள்..

இன்று சோவியத் யூனியனே தனித்தனி முதலாளித்துவ நாடுகளாகிவிட்டன. அங்கு மே 1 விடுமுறை தினம் அல்ல. (மே

ஆனால் எப்போதும் முதலாளித்துவ நாடாக இருக்கும் இந்தியாவில் மே 1 அன்று அரசுவிடுமுறை ஏன்?
அதே போல அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று காந்தி ஜெயந்தி என்று அரசு விடுமுறை.
காந்தி மிக வலியுறுத்திய விசயங்களில் ஒன்று மது குடியாமை. அன்று மதுக்கடைகளுக்கு விடுப்பு.

ஆனால் காந்திஜெயந்திக்கு முந்திய நாள், மது விற்பனை அதிகரிப்பதாகவே வருடா வருடம் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது “புத்திசாலித்தனமாக” முந்திய நாளே மது வகைகளை வாங்கி வைத்துக்கொண்டு விடுமுறையைக்கொண்டாடுகிறார்கள் பெரும்பாலானவர்கள். மற்றபடி அன்று ராட்டையில் நூல் நூற்று, யாரும் பஜனை பாடுவதில்லை.

இப்படி தலைவர்களை அவமதிக்கும் விடுமுறைகள் தேவையா?

இந்த நிலையில், நேதாஜியின் பிறந்தநாளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சில அரசியல் பிரமுகர்கள் குரல்கொடுக்கிறார்கள்.

அதாவது, தலைவரைப் போற்றுவது என்றால் அன்று அரசு விடுமுறை வேண்டும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டது. இதுதவறல்லவா?

வருடம் முழுதும், வாழ்க்கை முழுதும் பின்பற்ற வேண்டிய தலைவர்களின் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுஅவர்களது பிறந்த, இறந்த நாளில் விடுப்பு கிடைத்து மதுகுடிப்பது என்ன பெருமை?

தவிர, வங்கி அல்லது பொதுத்துறை, தனியார் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், “ஒரு நாளில் இத்தனைஆயிரம் கோடி இழப்பு” என்று அரசு அறிவிக்கிறது, ஊடகங்கள் கவலைப்படுகின்றன.
ஆனால் அரசே வருடத்துக்கும் பல நாட்கள் பொது விடுமுறை என்று அறிவித்து இழப்பை ஏற்படுத்துவது என்ன நியாயம்?

விடுமுறை தினத்துக்கு முதல் நாள்..

அது மட்டுமல்ல..

இந்தியாவின் 121 கோடி மக்களில், அரசு ஊழியர்கள் ஒரு சதவிகிதமே இருப்பர். மற்றபடி தனியார் ஊழியர்கள்அதிலும்மிகப்பெரும்பான்மையானவர்கள் காற்கறி விற்பது, கூலி வேலை செய்வது போன்ற

அன்றாடங்காய்ச்சிகள்.

அவர்கள் அன்று உழைத்தால்தான் அன்று உணவு உண்ண முடியும்.

இவர்கள் காந்தி ஜெயந்தியோ, மகாவீர் ஜெயந்தியோ விடுமுறை எடுப்பதில்லை.

பிறகு எதற்கு அரசு விடுமுறை?

இதற்கு ஒரு சிறப்பான தீர்வு இருக்கிறது.

அதாவது அகில இந்திய அளவில் இரு நாட்கள் மட்டும் கட்டாய விடுமுறை. அது ஆகஸ்ட் 14 மற்றும் 15.

அந்த இரு நாட்கள்விடுதலைத் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம். தலைவர்களின் கருத்துக்களை

மக்களிடம் பரப்பலாம். நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

மாநில அரசுகளைப் பொறுத்தவரை இரு நாட்கள் பொது விடுமுறை. உதாரணமாகத் தமிழகம் என்றால் போகி மற்றும்பொங்கல் தினத்துக்கு. அந்த இரு நாட்களும் மக்கள் மகிழ்வாகப் பொங்கல் தினத்தைக்கொண்டாடட்டும்.

( அன்று தமிழகத்தில்  உள்ள  மத்திய  அரசு  அலுவலகங்களுக்கும்  விடுமுறை  அளிக்கப்பட  வேண்டும்.  இதே போல்  அந்தந்த மாநிலங்களின் பண்டிகைகளுக்கு இரு நாட்கள் கட்டாய விடுமுறை.)

இவற்றைத் தவிர வருடத்துக்கு மூன்று நாட்கள், அரசு ஊழியர்கள் அவரவர் விருப்பப்படி விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். தீபாவளியோ, ரம்ஜானோ, கிறிஸ்துமஸ்ஸோ, மகாவீர் ஜெயந்தியோ அவரவர்விருப்பம். அதே நேரம் எந்தெந்த நாள்விடுப்பு எடுக்கிறார்கள் என்பதை முந்தைய வருட  டிசம்பர் மாதமே சொல்லிவிட வேண்டும்.

இதனால் அரசு அலுவலகங்களில் பண்டிகை தினத்தன்று முதல் நாளே, நாளை அலுவலகம் இருக்கும்.. இத்தனை பேர் பணிபுரிவர் என்று அறிவிப்பு வைத்துவிடலாம்.  அரசு அலுவலகங்கள் வருடம் முழுதும் (நான்கு நாட்கள் தவிர்த்து)  தொடர்ந்து இயங்கும்.

பிறப்புச் சான்றிதழ் முதல், இறப்புச் சான்றிதழ்வரை பெற அரசு அலுவலகங்களுக்கு அல்லாடும் மக்களுக்கு இதனால் நன்மை ஏற்படும்.

மனித உழைப்பு, பொருளாதார உழைப்பு  இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

அதே நேரம் ஊழியர்களின் தனிப்பட்ட விடுப்புகள் (உடல் நலம், சுற்றுலா) விடுமுறைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

 

More articles

Latest article