சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசு நிறுத்தியுள்ளது.  பயனர்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை  கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்வது தெரியவந்ததால், அரசு மருத்துவமனைகளில் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மருந்து  வாங்க நேரு ஸ்டேடியம் வர வேண்டாம் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து சென்னையில் மட்டும் முதலில் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையில் குவிந்ததால் மாவட்டங்களுக்கும் விற்பனை விரிவுப்படுத்தப்பட்டது. திருச்சி, கோவை, சேலம், நெல்லை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை தொடங்கியது. அங்கே டோக்கன் விநியோகிக்கப்பட்டு மருந்து விற்பனை நடைபெற்று வந்தது. அடுத்த சில நாட்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரெம்டெசிவிர் மருந்துகளை போலி ஆவணங்கள் மூலம் அரசு மருத்துவமனைகளில் பெற்றுள்ள பலர், அதை அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளை நேரடியாக வழங்க அரசு முடிவு எடுத்ததால் அரசு மருத்துவமனையில் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளிலேயே விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலும் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், மருந்து வாங்க யாரும் நேரு ஸ்டேடியம் வர  வேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.