சென்னை

ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு மாற்றப்பட உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   குறிப்பாக கொரோனா சிகிச்சைக்கு மிகவும் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார்கள் வந்தன.  பல கைதுகளும் நடந்தன.  ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்க அரசே அம்மருந்தைச் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று ரெம்டெசிவிர் மருந்து விநியோக மையம் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேரு விளையாட்டரங்கத்துக்கு மாற்றப்பட உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.  கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நேரு விளையாட்டருகில் கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.