மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்

Must read

சென்னை

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும், பத்மப்ரியா உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்தது.   கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசனும் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல பொறுப்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.  முதலில் அக்கட்சியின் செயலரும் நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசர் விலகுவதாக அறிவித்தார்.  அதையொட்டி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

சென்ற வாரம் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார்.  தற்போது அக்கட்சியின் பொது செயலர் பதவியில் இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கட்சியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்தாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகி உள்ளார்.  அவர் தாம் அரசியல் பின்புலம் இல்லாத பெண்ணாக இருந்தும் வாக்களித்தமைக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ”சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதித் தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாகத் தொடரும். என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

More articles

Latest article