நபிகள் நாயகம் பற்றி பாஜக பெண் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா விமர்சிக்க போய் அது அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை ஏற்படுத்தியுள்ளது.
அரபு நாடுகளில் உள்ள வணிக நிறுவனங்கள் இந்தியத் தயாரிப்புகளை புறக்கணித்து வருகின்றன.
அங்கே பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கும் அடுத்தடுத்து சிக்கல்கள் என்று ட்விட்டரில் பல வேதனை குரல்கள்.
அரபு நாடுகள் அடுத்தடுத்து ஒன்று சேர்ந்து கொண்டு இந்தியா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற லெவலில் போய்க்கொண்டிருக்கின்றன.
சம்பந்தப்பட்டவர்களை பாஜக கட்சியில் இருந்து நீக்கி விட்டோம் என்று பாஜக சொன்னாலும் இந்திய அரசு என்ற அளவில் மோடி அரசுக்கு இது பெரும் தலைவலியே.
“இஸ்லாமிய கூட்டமைப்பு தலைமைச் செயலகமானது, உள்நோக்கத்துடன் கூடிய தவறான, விமர்சனங்களை முன்வைக்கிறது. இது சிலரின் தூண்டுதலின் பேரில் எடுக்கப்படும் பிரிவினை முயற்சி என்றே தோன்றுகிறது” என மத்திய அரசு பதிலடி கொடுக்கிறது.
பொருளாதாரப் பின்னலில் இருந்து ஒரு நாடு இன்னொரு நாட்டை விட்டு விலகி விட முடியாது என்ற அளவுக்கு தற்போது உலகம் போய்விட்டுள்ள நிலையில், மேற்கொண்டு இந்த விவகாரம் எப்படி போகும் என்று தெரியவில்லை.
ஆனால் சிறிய காயத்தை பெரிய காயமாக மாற்ற இரு தரப்புமே விரும்பாது என்று தெரிகிறது. நடக்க வேண்டியதும் அதுதான்.
என்னதான் விஞ்ஞானம் முன்னேறி விட்டாலும் ஆக்கப் பணிகளுக்காக இன்றும் அதிகமாக தேவைப்படுவது மனிதவள ஆற்றல்தான்.
கடந்த 40 ஆண்டுகளில் அரபு தேசங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கும், பொலிவான தோற்றத்திற்கும் இந்திய தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.
கூர்ந்து கவனித்தால் இருதரப்புமே மோதிக்கொள்வது மதத்தின் அடிப்படையில்.
மதத்தின் மீதான அதீத நம்பிக்கை என்பது, பல நேரங்களில் விரும்பத்தக்க நிகழ்வுகளை கொடுப்பதேயில்லை.
மதம் மட்டுமே எல்லாவற்றை விடவும் உயர்ந்தது என்று நினைக்கும் எந்த ஒரு நாடும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.
காலம் காலமாக பலரும் சொல்லிச் சொல்லி அலுத்துப்போன விஷயம்தான். அதாவது மத நம்பிக்கை வேறு, மாதிரி என்பது வேறு.
மதவெறியை முன்னெடுத்துச் செல்லும் போது உயிரையே கொடுப்போம் என்று சொல்லிக்கொண்டு பெரும் திரளான கூட்டம் கண்டிப்பாக வரத்தான் செய்யும். மூளையை மழுங்கடித்து அந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு என்ன வேணாலும் செய்யலாம்.
மதவெறியை முன்னெடுத்தவர்கள் திடீரென தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தால், கோழைகள், தொடை நடுங்கிகள் என்றெல்லாம், கேலி பேசும்.வளர்த்த கூட்டத்திடமே மிதிபடும் கட்டம் இது.
பாஜகவுக்கு தற்போது அந்த நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. சர்ச்சையாக பேசிய பெண் செய்தி தொடர்பாளர் கட்சியில் இருந்தே நீக்கி விட்டார்கள். பாஜக எந்த மதத்திற்கு எதிரானது என்றும் விளக்கம் மேல் விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஆனால் பாஜகவில் உள்ள இந்துத்துவாக்கள், பாஜகவை போட்டு வெளுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குட்டி நாடுகள் ஒன்று சேர்ந்து கொண்டு மிரட்டினால் 140 கோடி மக்கள் தொகை கொண்ட மோடி தலைமையிலான மிகப்பெரிய நாடு அடிபணிவதா #ShameonModiGovt என்றெல்லாம் கொதிக்கிறார்கள்
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கான விருந்தை கடைசி நேரத்தில் கத்தார் நாடு ரத்து செய்துவிட்டதால் அந்நாட்டின் விமானங்களை புறக்கணிப்போம் என்று டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்கிறார்கள்.
அரசாங்கங்களைத்தாண்டி, இரு தரப்பிலுமே இப்படி அதீத மத சிந்தனையாளர்களால், புறக்கணிப்போம், ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற மோதல் போக்கு தணிந்த பாடில்லை.
இருதரப்பு நல்லுறவு மற்றும் வர்த்தக நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கங்களே அமைதியாக போனாலும் இவர்களின் உள்ளூர மத வெறுப்பு தற்போதைக்கு தனியுமா என்பது தெரியவில்லை..
ஆனால், பாதிக்கப்படப்போவது இரு தரப்பிலுமே இவர்களுக்கு சம்பந்தமே இல்லாத உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் அயல்நாடுகளுக்கு பணிகளுக்காக சென்றவர்கள்..
மதவெறியர்களுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்று எந்த நாடாக இருந்தாலும் அப்பாவி மக்களை வஞ்சிக்கவே கூடாது.
– ஏழுமலை வெங்கடேசன்