சென்னை: தென்மாவட்ட மக்களுக்னான நிவாரணப் பொருள்களை அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் என தமிழ்நாடு அரசு போக்கு வரத்துதுறை அறிவித்து உள்ளது.

மேலும், திருச்செந்தூரில் பக்தர்களை மீட்க இலவச பேருந்து திருச்செந்தூர் கோவிலில் சிக்கி உள்ள பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் சிறப்பு இலவச பேருந்து மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு இலவச பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு நிவாரண உதவிகள் வழங்க குழு அமைத்துள்ள நிலையில்,  வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அரசு விரைப் பேருந்துகளில் நிவாரணப் பொருள்களை கட்டணமின்றி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, குமரி உள்பட தென் மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 17) முதல் பெய்த தொடர் கனமழை மற்றும் பேய்மழை  காரணமாகவும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.

பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, மணிமுத்தாறு, காரையாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.  மேலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எங்கு பார்த்தாலும் வெள்ளம் தான் என்கிற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தண்டவாளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளதால் ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.  அங்கு மீட்புபணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தென்மாவட்ட மக்களுக்கு பல நிறுவனங்கள், சமுக அமைப்புகள் என பல தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை ஒழுங்குப்படுத்த,   ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிவாரணம் அளிக்க விரும்புவோர் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ந்த நிலையில்,  தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருள்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல மற்றொரு அறிவிப்பில், தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால்  திருச்செந்தூர் கோவிலில் சிக்கி உள்ள பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப அரசு சார்பில் சிறப்பு இலவச பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு இலவச பேருந்துகள் மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களாக பக்தர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் உள்ள பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு பின் திருச்செந்தூரில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.