சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று கூறினார்.
அதுபோல, வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்னை மாநகராட்சி சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது” என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் உயிரிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய மாநில அரசுகளின் மெத்தனம் என்றும், பொதுமக்களுக்கு போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் இந்த சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர். அதுபோல திமுக எம்.பி. கனிமொழி மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகயான காங்கிரஸ், விசிகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்வை பார்வையிட வந்த யாரும் உயிரிழக்கவில்லை என அரசு கூறவில்லை. 5 பேர் உயிரிழந்தது எதிர்பாராத ஒன்று, யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
மெரினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை என்று கூறியவர், வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்த பின்பு யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் மருத்துவமனைகளில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தமிழ்நாடு அரசு முடிவு எடுக்கும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், விமான சாசக நிகழ்ச்சியின் நேரத்தை முடிவு செய்தது விமானப்படை தான். நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் 2 முறை ஆலோசனை நடந்தது. விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. தேவையான அளவுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டதாக இந்திய விமானப்படையே நேற்று தெரிவித்திருந்தது. விமான சாகச நிகழ்ச்சியின்போது போதுமான அளவுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.
வெயில் காரணமாக குடை, தண்ணீர் எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. விமானப்படை கேட்டது 100 வசதிகளுடன் கூடிய வார்டு, ஆனால் அரசு தரப்பில் 4,000 படுக்கை வசதிகள் தயாராக இருந்தன. தமிழக அரசின் விரிவான ஏற்பாடுகளை இந்திய விமானப்படை அதிகாரிகளே பாராட்டிருந்தனர். மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை தருவதற்கு 65 மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். வெயில் உள்ளிட்ட காரணங்களால் 102 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 93 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுவிட்டனர்,
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டங்கள் நடத்தி பல சேவைகள் துறையை ஒருங்கிணைத்து ஏற்பாடுகள் செய்தோம். மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கடைகள் அகற்றி, தடுப்புகள் அமைத்து அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயலாற்றியது. அவசர மருத்துவ உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன வெயிலின் தாக்கத்தினால் தான் மயக்கம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் நானும் இருந்தேன் என்று கூறினார்.