மும்பை

கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் சாதனம் நிறுவுதல் தொடர்பாக இஸ்ரேல் வல்லுநர்களை இந்தியா வர அனுமதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டாம் அலை பரவலில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.   நேற்றைய தினசரி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது.  இதுவரை 2.15 கோடி பேர் பாதிப்பு அடைந்து 2.34 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இதையொட்டி இஸ்ரேல் நாடு இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இஸ்ரேலிய குடிமக்கள் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது.

மூச்சு வெளியிடுவதை வைத்து இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ப்ரீத் ஆஃப் ஹெல்த் என்ற நிறுவனம் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் கருவியைக் கண்டறிந்துள்ளது. அந்த கருவி சோதனையின் மூலம் சில விநாடிகளில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இக்கருவி மூலம் மேற்கொண்ட சோதனையில் அதன் வெற்றி வீதம் 95 சதவீதமாக உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் அந்த நிறுவனத்துடன் 110 கோடி ரூபாய்க்குக் கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒப்பந்தத்தின்படி, ப்ரீத் ஆஃப் ஹெல்த் நிறுவனத்திடமிருந்து நூற்றுக்கணக்கான கருவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி, அதன்மூலம் மாதத்துக்கு 73 கோடி ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான சோதனைகளைச் செய்யவுள்ளது. அந்தக் கருவிகள் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்தடைந்துவிட்டன. கருவிகளை இந்தியாவில் நிறுவுவதற்கும், அதன் செயல்பாடுகளை ரிலையன்ஸ் நிறுவனத்தினருக்குச் சொல்லிக்கொடுக்கவும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியாவுக்கு வரவேண்டியத் தேவையுள்ளது.

இஸ்ரேலிய அரசு தடை காரணமாக ப்ரீத் ஆஃப் ஹெல்த் நிறுவனத்தின் வல்லுநர்கள் இந்தியாவுக்கு வருவதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இஸ்ரேலிய வல்லுநர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சிறப்பு அனுமதி கோரியுள்ளது. இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்களுக்குச் சிறப்பு அனுமதி கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.